இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்கும்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித்தை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. 


விதியின்படி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன் தற்போதைய தலைமை நீதிபதியால் கொலீஜியம் கூட்டத்தை கூட்ட முடியாது. இதன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் பணியிடங்களை லலித் தலைமையிலான கொலீஜியத்தால் பரிந்துரைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி லலித் நவம்பர் 8 ஆம் தேதி அன்று ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய். சந்திரசூட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால், அரிதிலும் அரிதான நிகழ்வாக, நீதிபதி நியமனம் குறித்து தலைமை நீதிபதியிடம் கேட்டு கொண்டதை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தகவலாக வெளியிட்டுள்ளது. பொதுவாக, இது தொடர்பாக தகவல் வெளியிடப்படாது.


புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து லலித்திடம் அரசு கேட்டு கொண்ட நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் தலைமை நீதிபதி லலித்தால் இனி நியமனம் செய்ய முடியாது.


முன்னதாக, தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா இருந்தபோது, அவர் இரண்டு நீதிபதிகள் நியமிப்பதை தடுக்க, இதே விதியையே மேற்கோள் காட்டி இருந்தார் லலித்.


இச்சூழலில், உச்ச நீதிமன்றத்திற்கு நான்கு நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக லலித் எழுதிய கடிதம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவ காரணமாக அமைந்துள்ளது. நீதிபதிகள் சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசக் மற்றும் அப்துல் நசீருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி தங்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்டதற்கு கொலீஜியம் உறுப்பினர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்களின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய முடியாது என்றும் ஒருமித்த கருத்தை உருவாக்க ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.


"மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான நியமனம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் கடிதம் மூலம் செய்யப்படக்கூடாது" என லலித் எழுதிய கடிததற்கு நீதிபதிகள் பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு நியமிப்பதற்காக மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆகிய நான்கு பேரையும் கொலீஜியம் பரிசீலிக்க இருந்தது. இருப்பினும், நீதிபதி சந்திரசூட் மாலை வரை நீதிமன்றத்தில் இருந்ததால், கொலீஜியம் குழுவை சந்திக்க முடியவில்லை. 


அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 1ஆம் தேதி, தசரா விடுமுறை காரணமாக உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு சென்றுவிட்டது. அக்டோபர் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும். ஆனால், அதற்குள் தலைமை நீதிபதி லலித் ஓய்வு பெறுவதற்கான கால அவகாசம் ஒரு மாதத்திற்கு குறைவாக ஆகிவிட்டது.


நீதிபதி லலித்தின் கொலிஜியம் தனது குறுகிய 74 நாள் பதவிக்காலத்தில் ஒரு நீதிபதியின் பெயரை மட்டுமே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.