வைகுண்ட ஏகாதசி:
ஏகாதசி என்றால் 11வது நாள் என்று பொருள்படும். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வரும் 11வது நாள் ஏகாதசி. இந்தத் திதி இறைவழிபாட்டுகே உரியது என்பது ஆன்றோர்கள் கருத்து. இநாட்களில் நம்மைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை தியானம் செய்திருந்தால் அவனருள் நிறைந்து மனம் புத்துணர்ச்சி கொள்ளும். மேலும் ஏகாதசி நாளில் நாம் வழிபாடு செய்தால் மனதின் விருப்பங்கள் நிறைவேறும் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு:
அந்த வகையில் ஏகாதசியின் தொடக்க நாளான இன்று, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்புக்குப்பிறகு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார்.
தொடர்ந்து, அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ஏழுமலையான் கோவில் சுமார் 4 டன் மலர்களாலும், வண்ண சரவிளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இலவச டோக்கன் விநியோகம்:
வரும் 11-ம் தேதி இரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் திருப்பதியில் செய்யப்பட்டுள்ளன. இதற்கான இலவச டோக்கன்கள் திருப்பதியில் பிரத்யேகமாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட 96 கவுன்டர்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
பக்தர்களுக்கு அறிவுரை:
சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இலவச டோக்கன்களை பெறுவதற்காக வரும் பக்தர்கள் சிரமமின்றி அந்தந்த கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக திருப்பதி நகரின் பல்வேறு இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கும் கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்களும் திருமலையில் அனுமதிக்கப்பட்டாலும், எக்காரணத்தை கொண்டும் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், திருமலையில் உள்ள மற்ற பகுதிகளை பகதர்கள் சுற்றி பார்க்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரங்கநாதர் கோயில்:
இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலிலும், இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்:
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினர். அதன்பிறகு அதிகாலை 5.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில், பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.