மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, முண்டேகான் பகுதியின் இகத்புரியில் ஜிண்டால் குழுமத்தின் ரசாயான தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு, வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
பாய்லர் வெடித்து விபத்து:
காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன், வெடித்து சிதற ஆலையில் தீப்பற்றியது. உடனடியாக தீ மளமளவென ஆலையின் மற்ற பகுதிக்கும் வேகமாக பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிந்து, பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே, ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டிருந்து அங்கிருந்து வெளியேறினர்.
தீயையணைக்கும் பணிகள் தீவிரம்:
அதேநேரம், தீ வேகமாக பரவியதில் சிலர் ஆலையில் இருந்து உடனடியாக வெளியேற முடியாமல் தீப்பற்றிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதோடு, மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டி டோலனாகாவில் உள்ள தீயணைப்புப் பிரிவினரும், ஜிண்டால் நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராணுவம் உதவி:
எளிதில் தீப்பற்றும் ரசாயானம் உள்ளே இருந்ததால் தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிய, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்கொள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.5 லட்சம் நிவாரணம்:
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியாத நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.