உலக அளவில் தடுப்பூசி உற்பத்தியின் தலைநகரமாக இந்தியாவை மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசியது நினைவிருக்கலாம். இதைப்போல, உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக ஐதராபாத்தையும் கூறலாம். பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஐதரபாத்துக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதை யாரோ சொல்லவில்லை, ஐதராபாத்தை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான் கூறியுள்ளார். (இந்தியாவில் முதலில் அனுமதி அளிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில், உள்நாட்டுத் தயாரிப்பு கோவாக்சின் தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கண்டுபிடிப்பான இதை, ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், உற்பத்திசெய்வதே தெரிந்ததே.)


தகவல்தொழில்நுட்ப மாவட்டமான சைபராபாத்தில் கோவிட் சிகிச்சை மையத்தை புதனன்று தொடங்கிவைத்த அவர், “ உலகத்தின் தடுப்பூசி உற்பத்திக் கேந்திரமாக ஐதராபாத் இருக்கின்றபோதும், உள்ளூர் மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் நம்மிடம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.” என்றார் அமைச்சர் ராமராவ்.  மேலும், “நமக்கு போதுமான தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு நம்முடைய அரசாங்கம் பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்தமுடியும். ஒட்டுமொத்த மாநிலத்திலும் 45 நாள்களுக்குள் தடுப்பூசியைச் செலுத்தும் பணியை முடித்துவிடமுடியும். நம்முடைய தேவை அதிகமாக இருக்கிறது; நமக்கு தரப்படும் தடுப்பூசிகளின் அளவோ மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லாம் மத்திய அரசு செய்வதுதான்.” என்றும் கூறினார், ராமாராவ்.


முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனான இவர்தான். தடுப்பூசி கொள்முதலுக்கான பணிக்குழுவின் பொறுப்பாளரும் ஆவார். ” உலகின் சில நாடுகளில் குறிப்பாக, கனடா, அமெரிக்கா, டென்மார்க் ஆகியவற்றில் தடுப்பூசிகள் தேவைக்கும் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். சில தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்காமலும் சிலவற்றுக்கு அனுமதி கிடைத்தும் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அதற்கான தேவையும் இல்லை. மத்திய அரசு இன்னும் கூடுதலான தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இங்கு அனுமதி அளித்து, தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.“ என்றும் ராமாராவ் கூறினார். தனிப்பட்ட கருத்தாகச் சொல்வதாகக் குறிப்பிட்டு, “ விரைவாக இந்தியாவுக்குத் தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கக்கூடிய பைசர், மாடெர்னா, சினோவாக் மற்றும் பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களை, மத்திய அரசு அணுகவேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.




பஞ்சாப் முதலிய சில மாநில அரசுகளுக்கு அயல்நாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக மருந்துவழங்க மறுத்ததைப் பற்றிப் பேசுகையில், “ அனைத்து மாநில அரசுகளின் தேவையையும் நம்பிக்கையையும் மத்திய அரசு கவனத்தில்கொள்ளும் என நம்புகிறேன். ஒவ்வொரு மாநில அரசும் தனியாக தடுப்பூசிக் கொள்கை வைத்துக்கொள்ள முடியாது. ஒரே நாட்டில் அனைவரும் இதில் இணைந்து செயல்படவேண்டும்.” என்றார் ராமாராவ். அடுத்தகட்டப் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்; தனித்தனியாகச் செயல்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.