இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு இன்று மத்திய சுகாதாரத்துறை விவரித்தது. இதன்படி நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு நிலவரம், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையிலான கொரோனா பாதிப்பு நிலவரம், வயதுவாரியான கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை ஆகியன விவரிக்கப்பட்டன.
இதன்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 மே 2021-க்குப் பிறகான மீண்டவர்கள் எண்ணிக்கை 81.8 சதவிகிதத்திலிருந்து 95.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 மே 2021 அன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டதை அடுத்து அதற்கடுத்த நாட்களில் சராசரி பாதிப்பு எண்ணிக்கையும் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 85 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும், ’வைரஸ் பரவுதலும் கணிசமாகக் குறைந்துள்ளது. கூட்டம் கூட்டமாக மக்கள் பாதிக்கப்படும் இடங்களில் அங்கிருந்து பரவாமல் தடுக்கப்பட வேண்டும். 2020-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் வகையில் இருப்பதால் பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதைக் கடுமையாகப் பின்பற்றுவதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என கொரோனா தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் வயதுவாரியான கொரோனா பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொரோனா முதல் அலைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலைக்காலத்தில் 31-40 வயதுடையவர்களிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முதல் அலைக்காலத்தில் 21.23 சதவிகிதம் பேரும் அதுவே இரண்டாம் அலைக்காலத்தில் 22.70 சதவிகிதம் பேரும் 31-40 வயதுடையவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடுப்பூசிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதுவரை மருத்துவப் பணியாளர்களுக்கு 1.70 கோடி டோஸ்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 17.24 கோடி டோஸ்களும் முன்களப்பணியாளர்களுக்கு 2.58 கோடி டோஸ்களும் 18-44 வயதுடையவர்களுக்கு 4.53 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 26.05 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக கொரோனா மூன்றாவது அலை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர் வி.கே.பால், அடுத்தடுத்த கொரோனா பாதிப்பு காலங்களில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். இதுதொடர்பான விழிப்புணர்வை பிள்ளைகளிடமும் குடும்பங்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Also Read: சிவசங்கர் பாபா விவகாரம் : விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது சிபிசிஐடி..!