முதலமைச்சராக பதவியேற்றபின் முதல்முறையாக டெல்லி சென்றிருக்கும் மு.க.ஸ்டாலின், நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும், மனைவி துர்கா சமேதமாக சென்று சந்தித்துள்ளார்.
இதில் முக்கியமான விஷயம், அவர் சோனியாகாந்தியிடம் பரிசளித்த புத்தகம். தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வென்று, ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் உள்ளிட்ட முக்கியமான பதவிகள் வகித்த ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்ற புத்தகத்தைதான் சோனியாகாந்தியிடம் பரிசாக அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த புத்தகத்தை தேர்வு செய்து கொடுத்தது முதல்வரின் தனிச்செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் என சொல்கிறார்கள். தமிழ் பண்பாட்டிற்கும், திராவிடக் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடந்து செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த புத்தகத்தை காங்கிரஸ் தலைவரிடம் பரிசளித்துள்ளது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
சிந்துவெளிக்கும் திராவிட பண்பாட்டிற்கும் இடையேயான உறவை உரிய ஆதாரங்களுடன் நிறுவும் இந்த நூல், சிந்து நாகரிகம் என்பது தமிழர்களின் நாகரிகம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளச் சொல்ல வலியுறுத்தி, பழந்தமிழர்களின் வாழ்வியலின் கட்டமைப்பை தகுந்த அகழாய்வு சான்றுகளுடன் உறுதிப்படுத்துகிறது. தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினாலும், இந்த நூலை முதலில் ஆங்கிலத்தில் எழுதியது, தமிழர்களின் வாழ்வியலும், பண்பாடும், நாகரிகமும் ஒட்டுமொத்த உலகிற்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில்தான் என சொல்லியிருப்பார் நூலின் ஆசிரியர் பாலகிருஷ்ணன்.
இந்த நூலை மு.க.ஸ்டாலின் டெல்லியில் சென்று, சோனியா காந்தியிடம் கொடுத்த பிறகு, முன்னர் கிடைத்ததை காட்டிலும் இப்போது அதிக கவனம் இந்த நூலுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதனால், பலரும் இணையதளத்தில் இந்த ‘Journey of a Civilization: Indus to Vaigai’ நூலை பற்றியும், நூலின் வேரை பற்றியும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பண்பாடு என்பது நாகரிகத்தை சுமந்து செல்லும் மக்களுடைய வரலாறுதான் என்று சிந்து வெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் என்று திடாவிட கலாச்சாரத்தையும், சங்க இலக்கியங்களை பற்றியும் எளிய தமிழில், எல்லோர்க்கும் புரியும் வகையில், பல்வேறு மேடைகளில் பேசியும் எழுதியும் வரும் ஆர்.பாலகிருஷ்ணன் தற்போது ஒடிசா மாநில முதல்வரின் ஆலோசகராக இருக்கிறார். இவரின் இந்த படைப்பு வெளியாகும்போதே வெகுவான வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படி தமிழர்களின் தொன்மம், வரலாறு, நாகரிகம், வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை இந்திய அளவில் கவனம் பெற வைக்கும் முயற்சியை எடுத்திருக்கும் முதல்வருக்கு தமிழ் கூறும் நல்லுலகு கடமைப்பட்டிருக்கிறது.
பதவியேற்றதும் தனது டிவிட்டரில் ’Belongs to the Dravidian stock’ என்று சேர்த்துக்கொண்ட மு.க.ஸ்டாலின், திராவிடக் கலாச்சாரத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகின்றன. இனி, தமிழர்களின் தொன்மங்களை தேடி கண்டுபிடிக்கும், அகழாய்வுகளுக்கும் வீரியம் கொள்ளும் என நம்பலாம்.