மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்தியதில் மோசமான இடத்தில் உத்தரப்பிரதேசம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 2024ம் ஆண்டிற்குள் குடிமக்கள் அனைவருக்கும் தூய்மையான குடி நீர் வழங்கும் நோகக்த்துடன் ஜல் ஜீவன் மிஷன் என்கிற திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தில், குடி நீருக்காக மக்கள் அலையும் நிலையைப் போக்கி, ஒரு குடும்பத்திற்கு 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, இதற்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் 14% பேர் தான் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மே 5ம் தேதி நிலவரப்படி, உத்தரப்பிரதேசத்திலுள்ள 2.28 கோடி குடும்பத்தினர் குடிநீருக்காக மாற்றுவழியையே பயன்படுத்துகின்றனர் என்ற தகவலின் மூலம், ஜல் ஜீவன் திட்டம் இன்னும் அங்கு பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டம் மோசமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது உத்தரப் பிரதேசம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 20 சதவீதமும், சத்தீஸ்கரில் 22 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 23 சதவீதமும், ராஜஸ்தானில் 24 சதவீதமுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2,64,27,705 குடும்பங்கள் உள்ள நிலையில் 35,86,230 குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் போய் சேர்ந்திருக்கிறது. அதே போல ஜார்கண்டில் 59, 23,320 குடும்பங்களில் 11,69,500 குடும்பங்களுக்கும், சத்தீஸ்கரில் 48,59,443 குடும்பங்களில் 10,82,180 குடும்பங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 1,77,22,587 குடும்பங்களில் 40,18,736 குடும்பங்களுக்கும், ராஜஸ்தானில் 1,05,68,805 குடும்பங்களில் 25,68,076 குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் போய் சேர்ந்திருக்கிறது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் அறிக்கைப்படி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் சுமார் 2.28 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என்றும், மேற்குவங்கத்தில் 1.37 கோடி குடும்பங்களுக்கும், ராஜஸ்தானில் 80 லட்சம் குடும்பங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 1.26 கோடி குடும்பங்களில் 54.33 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. அதே போல, கர்நாடகாவில் 48.26 லட்சம் குடும்பங்களும், மத்திய பிரதேசத்தில் 49.29 லட்சம் குடும்பங்களும் பயனடைந்திருக்கின்றன. அதாவது, கர்நாடகா 49 சதவீதமும், தமிழ்நாடு 43 சதவீதமும், மத்திய பிரதேசம் 40 சதவீதமும் இத்திட்டத்தினை நிறைவேற்றியிருக்கின்றன.
பஞ்சாபில் 99 சதவீதமும், குஜராத்தில் 95 சதவீதமும், இமாச்சலப் பிரதேசத்தில் 94 சதவீதமும், பீகாரில் 93 சதவீதமும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தினை 100 சதவீதம் நிறைவேற்றிய மாநிலங்களும் இருக்கின்றன. கோவா, தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் 100% செயல்படுத்தி சாதனை படைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.