கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஆந்திர முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

Continues below advertisement

இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

சட்டப்போராட்டத்தில் அடுத்தடுத்து வெற்றி:

சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர். சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு நான்கு வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் வரும் நவம்பர் 28ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Continues below advertisement

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு சட்ட போராட்டத்தில் அடுத்த வெற்றி கிடைத்துள்ளது. எந்த வித நிபந்தனையும் இன்றி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பேரணிகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என இடைக்கால ஜாமீன் வழங்கும்போது நிபந்தனை விதிக்கப்பட்டது.

வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல், நிபந்தனைகளுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுன ராவ் வழங்கியுள்ள தீர்ப்பில், "சந்திரபாபு நாயுடு, தனது சிகிச்சைகள் குறித்த அறிக்கையை ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்குப் பதிலாக விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) நீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா சந்திரபாபு நாயுடு?

வரும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. தனது கைது குறித்து சந்திரபாபு நாயுடு, விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியினரும் அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தெலங்கானா தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. தெலங்கானாவில் அக்கட்சிக்கு என நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 15 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றது. 2019 தேர்தலில் 2 இடங்களில் வெற்றிபெற்றது.