உத்தர காண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகாண்ட், இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடார்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலமாக தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பதால அவர்களின் நிலை என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் துளையிட்டு தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-தீபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து விமானப் படையின் சி 17 விமானம் மூலம் சுரங்கத்தை தோண்டும் இயந்திரங்கள் சில்க்யாரா பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக முதலமைச்சௌ புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார். மேலும், சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் செய்யப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதிக்கு வந்தார். அவருடன் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. Micro tunnelling பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.