10வது நாளாக தொடரும் மீட்புப்பணி


உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.


அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்


முதல் முறையாக அனுப்பப்பட்ட சூடான உணவு:


இந்நிலையில், இன்றுடன் உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து நடந்து 9 நாட்கள் ஆகிவிட்டது. முன்னதாக பொருத்தப்பட்ட பைப் மூலம் தான் உணவுகள் வழங்கப்பட்டு  வந்தன. ஏற்கனவே உலர் கொட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சுடச்சுட கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைக்கும் ஹேமந்த் என்பவர் கூறுகையில், "சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு முதல் முறையாக சூடான உணவை தயார் செய்து வருகிறோம். இந்த சூடான உணவு சுரங்கத்திற்குள் அனுப்பி வைக்கப்படும். தற்போது கிச்சடியை தயார் செய்து அனுப்ப உள்ளோம். தொழிலாளர்களுக்கு கொடுக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவை மட்டுமே நாங்கள் தயார் செய்கிறோம்.






அதன்படி வாழைப்பழம், ஆப்பிள், கிச்சடி, தாலியா உணவுகளை அனுப்பும் வகையில், அகலமான வாய் கொண்ட பிளாஸ்டிக் உருளை பாட்டில்களில் கிச்சடியை நிரப்பி, தொழிலாளர்களுக்கு அனுப்புகிறோம்" என தெரிவித்தார். இதுகுறித்து மீட்புப்பணி பொறுப்பாளர் கூறுகையில், "சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தற்போது பொருத்தியுள்ள 900 மி.மீ பைப் மூலம் மீட்பது என்பது முக்கிய சவாலாகும். ஆனால், தற்போது 6 இன்ச் லைப்லைன் மூலம்  சுரங்கப்பாதைக்குள் உணவு, செல்போன் மற்றும் சார்ஜர்கள் அனுப்பப்படும். மேலும், சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு என்னென்ன உணவுகள் அனுப்பலாம் என மருத்துவர்களின் உதவியுன் உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தான் அவர்களுக்கு அனுப்பப்பபட்டு வருகிறது” என்றார்.


 வீடியோ வெளியீடு:


10வது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், பைப் லைன் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் கேமரா முன் வரச்சொல்லி அடையாளம் கண்டு மீட்புக் குழு பேசியுள்ளது.  தொழிலாளள்ரகளின் முதல் காட்சி வெளியாகி மீட்புக் குழுவினருக்கு உத்வேகத்தையும், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையும் கொடுத்துள்ளது.