ICMR: உடல்நிலை பிரச்சினைகளும், வாழ்க்கை முறைகளுமே திடீர் மரணத்திற்கு காரணம் என ஐசிஎம்ஆர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 


திடீர் மரணங்கள்:


சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு பலரும், கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம்  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில், இந்த கொரோனா தடுப்பூசி தான் இளைஞர்கள் மரணத்திற்கு காரணம் என்று சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  


ஐசிஎம்ஆர் பரபர தகவல்:


இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில், கொரோனா தடுப்பூசி இளைஞர்களின் திடீர் மரணங்களின் அபாயத்தை அதிகரிக்காது. மாறாக, இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ்  வேக்சின் செலுத்திக் கொண்டால் திடீர் மரணங்கள் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31, 2023 வரை நாடு முழுவதும் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகள் மற்றும் 18-45 வயதுடையவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 729  பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கொரோனா இரண்டு டோஸ் வேக்சின் செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படுவது குறைந்துள்ளது. அதேபோல, ஒரு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்ட இளைஞர்களுக்கு, இது ஓரளவுக்கு பாதுகாப்பைக் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 


திடீர் மரணத்திற்கு காரணம்:


மேலும்,  இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான காரணம் என்ன என்பது பற்றியும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதாவது, தீவிர கொரோன தொற்று, ஏற்கனவே குடும்பத்தில் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டது, இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், தீவிர உடற்பயிற்சி செய்தல்,  வாழ்க்கை முறை சூழல்கள்  ஆகியவை தான் திடீர் மரணங்களுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 


மத்திய அமைச்சர் சொல்வது என்ன?


இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா கூறுகையில், "இளைஞர்களின் திடீர் மரணம் தொடர்பாக ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியது. கொரோனா தொற்றால் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவராத்திரி கொண்டாட்டங்களின் போது குஜராத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களுக்கு இதுவே காரணமாகும்.  எனவே, இளைஞர்களின் திடீர் மரணத்திற்கும், கோவிட் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.  உடல்நிலை பிரச்சனைகளும், வாழ்க்கை முறைகளுமே இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு காரணம் என ஐசிஎம்ஆர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.