பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்தாண்டு மக்களவை நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.


பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 15 மாதங்களிலேயே காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்தது.


இதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு தாவினார்கள். பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவை தேர்தலில் களத்தில் இறக்கியது. 


இந்நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெற்றது. சில சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே ஆங்காங்கே வன்முறை மோதல்களும் நடந்தன. தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, மாலை 6 மணிவரை, மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீத வாக்குகள் பதிவானது.


மத்தியப்பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறுகையில், "மாலை 5 மணி வரை 71.16% வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டமன்றத் தொகுதியின்படி அதிகபட்சமாக சைலானா தொகுதியில் 85.49% வாக்குகள் பதிவாகியுள்ளது. கில்சிப்பூர் ராஜ்கரில் 84.17% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சியோனியின் பர்காட் சட்டமன்றத் தொகுதியில் 84.16% வாக்குகள் பதிவாகியுள்ளன. அகர் மால்வா மாவட்டத்தில் 82%, நீமுச்சில் 81,19% மற்றும் ஷாஜாபூரில் 80.95%... அலிராஜ்பூரில் 56.24%, பிண்டில் 58.41%, போபாலில் 59.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரி 71.16%. ஆகும்” என தெரிவித்தார். 


மத்திய பிரதேசத்தில் இருக்கும் அடர் தொகுதிக்கு உட்பட்ட கிஷுபுராவில் அமைப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் வாக்கிப்பதிவின் போது சிலர் வீடியோ எடுத்து பதிவு செய்தனர். இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது. எனவே இந்த வாக்குச் சாவடியில் மட்டும் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.






கிஷுபுராவில் இருக்கும் வாக்குச் சாவடியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தான் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ததால், இந்த முறை வாக்குப்பதிவு செய்த மக்களின் நடு விரலில் மை வைக்கப்படுகிறது. மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


ரசகுல்லாவால் நேர்ந்த விபரீதம்... கல்யாண வீட்டில் கலாட்டா...6 பேர் மருத்துவமனையில் அனுமதி...