உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளமும், நிலச்சரிவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோசமான பேரழிவிற்கு கடவுளின் மரத்தை வெட்டியதும் ஒரு காரணம் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

கடவுளின் மரம்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற மாவட்டம் உத்தரகாசி. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கோத்ரி கோயில். மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். கங்கோத்ரிக்கு செல்வதற்கு தாராலி கிராமத்தின் வழியாகவே வந்து செல்ல வேண்டும். மலைகளின் நடுவே பனி சூழ அமைந்துள்ள இந்த கிராமம்தான் தற்போது கங்கை ஆற்றின் காட்டாற்றின் வெள்ளத்திற்கும், நிலச்சரிவிற்கும் ஆளாகி அழிந்துள்ளது. 

Continues below advertisement

வெட்டப்பட்ட கடவுளின் மரங்கள்:

இந்த தாராலி கிராமத்திற்கு மிக அருகிலே உத்தரகாசி - ஹர்ஷில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து செயல்படுத்தப்பட்டது. இந்த சாலையை அமைப்பதற்காக கடவுளின் மரம் என்று மக்களால் அழைக்கப்படும், சுமார் 6 ஆயிரத்து 500 தேவதாரு மரங்களை (ஊசியிலை மரங்கள்) அரசு சார்பில் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த தேவதாரு மரங்களை கடவுளின் மரங்கள் என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த ஊசியிலை மரங்கள் ஏராளமான மருத்துவ குணங்களை காெண்டதுடன் மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு, பாறைகள் சரிவை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கையை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாலும், ஏராளமான மருத்துவ குணங்களையும், மிக உயரமாக கம்பீரமாக இருப்பதாலும் இந்த மரத்தை தெய்வ மரங்கள் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். இமயமலை பகுதிகளில் அதிகளவு இந்த தேவதாரு மரங்கள் காணப்படுகிறது. 

உத்தரகாசி - ஹர்ஷில் சாலை:

உத்தரகாசி - ஹர்ஷில் சாலைக்காக சுமார் 10 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், அதில் சுமார் 6500 மரங்கள் கடவுளின் மரம் எனப்படும் தேவதாரு மரங்கள்( ஊசியிலை மரங்கள்) என்றும், இந்த மரங்கள் வெட்டப்பட்ட காரணத்தாலே தற்போது இந்த மாபெரும் நிலச்சரிவு உண்டாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக உத்தரகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டுமான பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வந்ததால், 1997ம் ஆண்டே காடுகள் அழிப்பைத் தடுப்பதற்காக உத்தரகாசியைச் சேர்ந்த உள்ளூர் பெண்கள் அந்த காடுகளில் உள்ள மரங்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மரங்களை வெட்டி அமைக்கப்பட்ட உத்தரகாசி - ஹர்ஷல் சாலையும் தற்போது நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இயற்கையை அழித்ததற்கு தண்டனை:

உத்தரகாசி - ஹர்ஷல் சாலை திட்டத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 30 ஆயிரம் மரங்களை கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை அரசு நட உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அந்த மரங்களும் முழுமையாக நடப்படவில்லை என்பதே இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

இயற்கையை முறையாக பேணிக்காக்காததும், மலை பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு மரங்களின் அருமைகள் தெரியாமல் அதை வெட்டி வீழ்த்தியதும், இயற்கை நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்ததுமே இந்த கோரத்திற்கு காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தாராலி கிராமத்தில் தற்போது காட்டாற்று வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் அடித்துச் செல்லப்பட்ட  மற்றும் சிக்கிய கட்டிடங்கள் பலவும் கங்கை நதியின் மிக அருகில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களாகவே உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒருவேளை ஊசியிலை மரங்கள் அதிகளவு இருந்திருந்தால் நிலச்சரிவை தடுத்திருக்கலாம். காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றே பலரும் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.