உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தாராலி கிராமத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாயமான இந்த வெள்ளத்தில் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 40 முதல் 50 வீடுகள் வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

Continues below advertisement

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்:

திடீரென வந்த இந்த காட்டாற்று வெள்ளத்திற்கு மேகவெடிப்புதான் காரணம் என்று தகவல் வெளியாகி வருகிறது. அது உண்மையா? வேறு ஏதேனும் காரணமா? என்பதை கீழே காணலாம். பாதிப்பிற்கு ஆளான தாராலி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

Continues below advertisement

இந்த கிராமமானது அந்த மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. புவியியல் அமைப்பின்பிடி, ஆண்டு முழுவதும் பனிமூட்டம் காணப்படும். மலைகளும், பனிமூட்டமும் சூழ்ந்த இந்த கிராமம் அழகின் மறு உருவமாக காட்சி தருகிறது. இந்த உத்தரகாசி மாவட்டம் முழுவதும் வரிசையான உயர்ந்த மலைமுகடுகள், எப்போதும் நீரோட்டம் நிறைந்த வற்றாத நதிகள், ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளது.

மேகவெடிப்புதான் காரணமா?

உத்தரகாசியில் ஏற்பட்ட இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்திற்கு மேகவெடிப்புதான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், உத்தரகாசி உள்பட உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மேகவெடிப்பு என்றால் 10 கீ.மீ. சுற்றளவு பகுதியில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீட்டர் மழைப்பொழிவு பெய்தால் மட்டுமே அதை மேகவெடிப்பாக கருத முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

ஆனால், செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி உத்தரகாசியில் 2.7 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. அதேபோல, நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேகவெடிப்பிற்கு  போதுமான அளவு மழைப்பொழிவும் பதிவாகவில்லை என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், உத்தரகாண்டின் ஹரித்வாரில் மட்டும் நேற்று 300 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

உத்தரகாசியைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 1289 மி.மீட்டர் மழை பொழிவது வழக்கம் ஆகும். 1969ம் ஆண்டு 2 ஆயிரத்து 436 மி.மீட்டர் மழைப்பொழிவு பெய்ததே இதுவரை வரலாற்றிலே அங்கு அதிகம் பெய்த மழைப்பொழிவு ஆகும். ஜுலை மாதமே அங்கு மிகவும் அதிகளவு மழைப் பொழியும் மாதம் ஆகும். இந்த மாதத்தில் மட்டும் அங்கு 312 மி.மீட்டர் மழை பொழியும். 

மேகவெடிப்பு இல்லாவிட்டால் என்ன காரணம்?

மேலே கூறியபடி, உத்தரகாசியில்  பாதிக்கப்பட்ட தாராலி கிராமம் கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இயற்கையின் அழகு சூழ அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஆன்மீக பயணிகளும், சுற்றுலா பயணிகளும் தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க அவர்களின் வசதிக்காக கங்கை நதி பாயும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓட்டல்கள், விடுதிகள். உணவகங்கள் கட்டப்பட்டது. மெல்ல, மெல்ல அதிகரித்து நதியின் பாதையில் பாதி ஆக்கிரமித்து கட்டிடங்களாக கட்டி, கங்கை நதி பாயும் பாதையை குறுகலாக மாற்றிவிட்டனர். 

ஆக்கிரமிப்புகளை அடித்துச் சென்ற கங்கை:

தொடர்ந்து 3 நாட்களாக பெய்த மழை காரணமாக மலையின் மேலே இருந்து கீழ் நோக்கி பாய்ந்து வந்த கங்கை நதி பாய்வதற்கு போதியளவு இடம் இல்லாமல் நதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகங்கள், வீடுகள், விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை சூறையாடிச் சென்றுள்ளது.

ஆன்மீக பயணிகள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தை கண்டு அவர்ளுக்காக நதியின் பாதையை ஆக்கிரமித்து வணிக கட்டிடங்களையும், வீடுகளையும் கட்டிய மனிதனின் பேராசையும் இந்த கோர காட்டாற்று வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நிகழ்ந்ததும் இதுபோன்ற காரணத்தாலே ஆகும். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.