பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் இது போன்ற சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் மாநிலம் பெறுகிறது.
இந்தியாவில் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுக்கும் முறை மற்றும் பல்வேறு தனிநபர் உரிமைகள் என மதங்களின் அடிப்படையில் தனித்தனியாக சிவில் சட்டங்கள் உள்ளன.
இதனிடையே நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதேவேளையில் பலர் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக போர்க்கொடியும் தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் பாஜக அரசு ஆளும் மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதனால் தற்போது பொதுசிவில் சட்டத்தை பாஜக அமல்படுத்தியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் பெருமையை பெற்றுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளுக்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என முதலமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அசாம் உட்பட பல பாஜக ஆளும் மாநிலங்கள் ஏற்கனவே உத்தரகாண்டை முன்மாதிரியாக எடுத்துகொள்வதாக விருப்பத்தை தெரிவித்துள்ளன.
பொது சிவில் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான திருமண வயது, விவாகரத்துக்கான காரணங்கள் மற்றும் அனைத்து மதங்களிலும் உள்ள நடைமுறைகளை நிர்வகிக்கும். மேலும் பலதார மணம் மற்றும் 'ஹலாலா'வை தடை செய்கிறது.
இனி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதம், சாதி, இன குழுக்களும் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் ஒரே சட்டத்தை கடைபிடிக்கும். பழங்குடியின மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் இனி லிவ் இன் உறவில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் அரசு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம், சிறை தண்டனையும் உண்டு. லிவிங் உறவில் இருப்பவர்கள் உறவை முறித்து கொள்ள நினைத்தால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இரண்டு பேர் சேர்ந்து வாழ முடிவு செய்தால் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு குறுகிய விசாரனையை நடத்துவார்.
ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். மாற்று பாலினத்தவர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படாது. அதேபோல் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்,
விவாகரத்து வழக்கில் கணவரோ மனைவியோ வேறு மதத்திற்கு மாறினால் அது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக மத்திய அரசு முயன்று வரும் நிலையில் உத்தரகாண்ட் அதற்கு முன்னோடியாக திகழ்கிறது.