GSLV F15 ISROs 100th Satelite: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் NVS-02 செயற்கைகோள் வரும் 29ம் தேதி, காலை 6.23 மணியளஇல் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஸ்ரோவின் NVS-02 செயற்கைகோள்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வரும் ஜனவரி 29ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனது 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. அதாவது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, GSLV F15 ராக்கெட் மூலம், NVS-02 எனும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வரும் 29ம் தேதி காலை 6.23 மணிக்கு உள்நாட்டு கிரையோஜெனிக் நிலை கொண்ட GSLV-F15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும், என்விஎஸ்-02 செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
NVS-02 செயற்கைகோளின் பயன் என்ன?
NVS-02 என்பது NVS தொடரின் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும். இது இந்தியாவின் இந்தியாவின் நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். இந்த செயற்கைகோள் இந்திய பயனர்களுக்கு துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேர (PVT) சேவையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும். அதோடு, இந்திய நிலப்பரப்புக்கு அப்பால் சுமார் 1500 கி.மீ தூரம் பரப்பளவிலான பயனர்களுக்கும் இந்த சேவையை வழங்கும். புதிய NVS-02 செயற்கைக்கோள் L1 அதிர்வெண் பட்டையை ஆதரிப்பது போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது, இது அதன் சேவைகள் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும்.
அதன்படி, NavIC இரண்டு வகையான சேவைகளை வழங்கும், அதாவது ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS) மற்றும் Restricted Service (RS). NavIC இன் SPS ஆனது 20 மீட்டருக்கும் அதிகமான நிலைத் துல்லியத்தையும், சேவைப் பகுதியில் 40 நானோ விநாடிகளுக்கு மேல் நேரத் துல்லியத்தையும் வழங்குகிறது
100வது ராக்கெட் லாஞ்ச்:
ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (SLV) எனப்படும் முதல் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் இயக்குனராக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து சுமார் 46 ஆண்டுகால பயணத்தின் விளைவாக, வரும் 29ம் தேதியன்று அங்கிருந்து 100வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் ஜிஎஸ்எல்வி-எஃப்15 என்பது ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் 17வது விமானம் மற்றும் உள்நாட்டு கிரையோஜெனிக் கட்டத்தைக் கொண்ட 11வது விமானமாகும். தற்போது வரை இந்தியா 66 பிஎஸ்எல்வி, 16 ஜிஎஸ்எல்வி, 7 எல் வஎம்3 , 4 எஎஸ்எல்வி, 4 எஸ்எல்வி மற்றும் 3 எஸ் எஸ்எல்வி ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
அதோடு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சவுண்டிங் ராக்கெட் வளாகத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது முதல், 'ரோகினி-125' என்ற சிறிய ராக்கெட் மூலம் 537 ஏவுதல்கள் நடந்துள்ளன.
மத்திய அரசு தீவிரம்:
ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சுழல் வடிவ தீவான ஸ்ரீஹரிகோட்டா, மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவின் உப்பளத்தில் அமைந்துள்ளது, இது நாட்டின் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்காக 1969 இல் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. நாட்டிற்கு புவியியல் ரீதியாக சாதகமான சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக பிரத்யேகமாக இஸ்ரோ இப்போது தனது இரண்டாவது ஏவுதளத்தை தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கி வருகிறது.
குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையம் எரிபொருளைச் சேமிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கிருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டவை போலல்லாமல் நேரடியாக தெற்கு நோக்கி பயணிக்க முடியும். அவை சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து தென்கிழக்கு திசையில் பறந்து இலங்கைக்கு மேல் பறப்பதைத் தவிர்க்கவும், தென் துருவத்தை நோக்கி கூர்மையான சூழ்ச்சியை எடுக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி நிலையம் செயல்படத் தொடங்கும்.