உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலை உச்சியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேறுபவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரும் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 






நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 34 மலையேறுபவர்கள் மற்றும் ஏழு பயிற்றுனர்கள் கொண்ட குழு, மலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது பனிச்சரிவில் சிக்கியதாக என்ஐஎம் முதல்வர் கர்னல் அமித் பிஷ்ட் தெரிவித்துள்ளார். மலைப்பகுதியில் பத்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து உத்தரகாசி பேரிடர் மேலாண்மை அலுவலர் தேவேந்திர பட்வால் கூறுகையில், "காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களில் எட்டு பேர் எங்களது குழு உறுப்பினர்களால் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மீட்பு குழுவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மலையேறுபவர்கள், மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 18 பேரை காணவில்லை" என்றார்.


இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தராகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் கங்கோத்ரி மலைத்தொடரில் இந்த சிகரம் அமைந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தராகண்ட் முதலமைச்சரிடம் பேசி நிலைமையை மதிப்பிட்டதாக தெரிவித்தார்.


மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்குமாறு இந்திய விமான படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.


உத்தரகாசியில் நேரு மலையேறும் நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் சிக்கியவர்களை மீட்க உடனடி மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உத்தரகண்ட் முதலமைச்சர் தாமி கூறியுள்ளார். "நேரு மலையேறும் நிறுவனத்தின் 28 பயிற்சியாளர்கள், உத்தரகாசி, திரௌபதியின் தண்டா-2 மலை உச்சியில் பனிச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிறகு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ராணுவத்தின் உதவியை வேண்டு கேட்டு கொண்டுள்ளோம். மேலும் மத்திய அரசு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைவரையும் காப்பாற்ற, மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.