சமீப காலமாகவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வினோதமான தண்டனைகளை நீதிமன்றம் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய நிபந்தனையாக அவர் சுத்தமான நல்ல தரமான பர்கர்களை, இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வாங்கி தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நபர் தனது முன்னாள் மனைவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பர்கர்கள் சுத்தமான சூழலில் சமைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனது முன்னாள் மனைவிக்கு அவர் 4.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அபராத தொகை நாளடைவில் மனைவிக்கு சென்றடையும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி ஜஸ்மீத் சிங் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, "குற்றம்சாட்டப்பட்டவர் மனுதாரரை (முன்னாள் மனைவி) திருமணம் செய்திருக்கிறார். தம்பதியினருக்கு மன வேறுபாடுகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே, அவர்கள் பிரிய முடிவு செய்துள்ளனர். இது ஒரு திருமண பிரச்சினை" என தெரிவித்தது.
இரு தரப்பினரும் ஜூலை 4 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள சாகேத் கோர்ட்டில் உள்ள சமரச மையத்தில் வழக்கைத் தீர்த்து வைக்க விண்ணப்பித்துள்ளனர். இது தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதாகவும் எந்த வித அச்சுறுத்தலும் வற்புறுத்தலும் இல்லாமல் சமரசம் செய்ய முன்வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் முன்னாள் மனைவி கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தவறான ஆலோசனையின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறியு நீதிமன்றம், "இந்த வழக்கு 2020 முதல் நடந்து வருகிறது.
மேலும். இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடித்துள்ளது. இந்த நேரத்தை முக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். எனவே, மனுதாரர் சமூகத்திற்கு சில சமூக நற்பணிகளை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளது.
நொய்டாவில் 'பர்கர் சிங்' மற்றும் 'வாட்-ஏ-பர்கர்' ஆகிய இரண்டு பர்கர் உணவகங்களை நடத்தும் குற்றம்சாட்டப்பட்டவர், இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு குறைந்தது 100 குழந்தைகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான பர்கர்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.