மும்பையில் நேற்றிரவு பாந்த்ரா - வொர்லி மேம்பாலத்தின் மேல் வேகமாக வந்த கார், ஏற்கனவே விபத்துக்குள்ளான பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர். புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த பயங்கர விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


 






முதல் விபத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் பிற கார்கள் மீது கார் மோதியதை வீடியோவில் காணலாம். விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயாராகி கொண்டிருந்த போது இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது.


போக்குவரத்தை திசை திருப்ப ஒரு நபர் முயற்சித்து கொண்டிருப்பதும் கடைசி நேரத்தில் வேகமாக வரும் காரில் இருந்து அவர் தப்பிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


 






இதுகுறித்து காவல்துறை தரப்பு, "இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் மேம்பால ஊழியர் உள்பட 13 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த 6 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிறு காயங்களுக்காக  சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்" என தெரிவித்தது.


நகரின் மிக முக்கியமான பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு இந்த மேம்பாலம் ஒரு உயிர்நாடியாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.


"மும்பையில் உள்ள பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களை எண்ணி வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.


விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து பாந்த்ராவில் இருந்து வொர்லி செல்லும் சாலையை அலுவலர்கள் மூடினர்.