உத்தரகாண்ட் அடுத்த ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு (HIV) வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் கைதிக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இதுகுறித்து, சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவிக்கையில், “ஹல்த்வானி சிறையில் எச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சிறையில் உள்ள நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 


எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனது குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது. 


எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன” என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், “ மருத்துவனையில் இருந்து ஒரு குழு மாதம் இரண்டு முறை சிறைக்கு சென்று கைதிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றன. லேசான பாதிப்பு உள்ள அனைத்து கைதிகளும் சிறைக்குள்ளே மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கைதிகளை மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளித்து வருகிறோம். எச்.ஐ.வி பாதித்த கைதிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கிறது.” என தெரிவித்தார். 


தற்போது அந்த சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, எச்ஐவி பாதித்த கைதிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 


எச்.ஐ.வி என்றால் என்ன..? 


எச்.ஐ.வி என்பது மனிதர்களின் எதிர்ப்புச் சக்தியை அழிக்கும் ஒரு நுண்ணிய கிருமியாகும். இவ்வாறு, நோய்த் தொற்று குறைவடையும் போது, நியூமோசிஸ்திஸ் நியூமோனியா, காசநோய், புற்று நோய்கள் ஏற்படும் நிலைமை எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.