கார் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் அவரது காரை போதையில் இயக்கவில்லை. அதுபோல் அவர் அந்த காரை வேகமாகவும் இயக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


மது அருந்தினாரா..? அதிவேகமாக சென்றாரா..?


இது குறித்து ஹரித்வார் சீனியர் எஸ்எஸ்பி, அஜய் சிங் கூறுகையில், நாங்கள் விபத்து நடந்த பகுதி வரையில் இருந்த 10 ஸ்பீட் கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் ஒன்றில் கூட ரிஷப் பண்ட் கார் அதிவேகமாக சென்றதற்கான அடையாளம் இல்லை.


அவரது கார் சீராக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் தான் சென்றுள்ளது. எங்கள் தொழில்நுட்பக் குழுவினரும் நிகழ்விடத்தைப் பார்த்து ரிஷப் பந்த் காரில் வேகமாக செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல் அவர் பயணத்தின் போது மது அருந்தவில்லை என்பதும் மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர் மது அருந்தியிருந்தால் அவரால் அந்த அதிர்ச்சியான நேரத்தில் காரில் இருந்து வெளிவந்திருக்க முடியாது என்றார்.


உத்தர்காண்ட் போலீஸ் டிஜிபி கூறுகையில், ஒருவேளை ரிஷப்பண்ட் பயணக் களப்பில் கண் அசந்து விபத்து நேர்ந்திருக்கலாம். அதற்குத் தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல் விபத்திற்கு பின்னர் சுய நினைவோடு போலீஸ் விசாரணையில் பதிலளித்த ரிஷப்பண்டும், தூக்க கலக்கத்தில் காரின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறியிருந்தார்.


விபத்து நடந்தது எப்படி?


25 வயதான கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்றிரவு உத்தராகண்டில் உள்ள ரூர்க்கி பகுதிக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தனியாக புறப்பட்டுச் சென்றார். தனது தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே தகவல் ஏதும் கொடுக்காமல் கிளம்பி உள்ளார். காலை 5.30 மணி அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் சென்ற போது சாலை தடுப்பின் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.


மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை அந்த வழியாக சென்ற ஹரியானா போக்குவரத்து கழக ஒட்டுநர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரும் அவருடன் பணியாற்றிய ஊழியரும் விரைந்து செயல்பட்டு காரில் படுகாயங்களுடன் சிக்கியிருந்த ரிஷப்பண்டை மீட்டு அருகில் உள்ள சக்சாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


மருத்துவமனையில் ரிஷப்பண்ட்:


ரிஷப் பந்தின் நெற்றியில் இரண்டு இடங்களில் கீறல் ஏற்பட்டுள்ளது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரலில் காயமும் முதுகில் சிராய்ப்பும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதேவேளையில் தீக்காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரிஷப் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில் ரிஷப்பண்ட் மது அருந்திவிட்டு தனது காரை ஓட்டினார். அவர் அளவுக்கு அதிகமான வேகத்தில் கார் ஓட்டினார் என்றெல்லாம் எழுந்த தகவல்களை அடுத்து, ரிஷப் பந்த் அவரது காரை போதையில் இயக்கவில்லை. அதுபோல் அவர் அந்த காரை வேகமாகவும் இயக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.