கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல்:
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேவையான அடிமட்ட அளவிலான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க, பூத் கமிட்டி அளவிலான பணியாளர்களுடன், பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதில், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, பா.ஜ.க. பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான அருண்சிங், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு:
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கட்சியின் வழக்கமான இந்துத்துவா மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பேசியதோடு, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கினார். 2013 முதல் 2018 வரை மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றிய சித்தராமையா, அண்மையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதாக சாடினார். மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் PFI தடை செய்யப்பட்டது, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
கட்சியை வலுப்படுத்துங்கள்:
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் குடும்ப அரசியல் செய்வதாகவும், அக்கட்சியினர் ஊழல்வாதிகள் என்றும் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மற்றும் ஜனத தளம் வலிமையாக உள்ள மாண்டியா மற்றும் பழைய மைசூரு பகுதி மக்கள், பா.ஜ.க.வை ஆதரித்து மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார்.
பாஜக தனித்து போட்டி:
இந்தமுறை பா.ஜ.க. கர்நாடகாவில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் எனவும், ஜனதா தளம் போன்ற எந்த கட்சியிடனும் கூட்டணி இருக்காது என்றும் அமித் ஷா தெரிவித்தார். எனவே, பெரும்பான்மையுடன் கட்சி வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுதினர். இதனிடையே, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் நோக்கில், மாநில அமைச்சரவையை விரிவாக்க அமித் ஷா ஒப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம், கே.எஸ்.ஈஸ்வரப்பா, ரமேஷ் ஜார்கிஹோலி ஆகியோருக்கு, கர்நாடக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் ஷா - பாண்ட்யா சந்திப்பு:
இதனிடையே, உள்துறை அமைசசர் அமித் ஷா, இந்திய கிரிகெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் க்ருணால் பாண்ட்யவை அழைத்து நேரில் சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.