ஜூன் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் அதிகப்படியான மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் முதல் வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சில தினங்களுக்கு முன் டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாள மழை கொட்டித் தீர்த்தது. தொடரும் கனமழையால் யமுனா, பீஸ், சட்லஜ் உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளர். யமுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மற்ற இடங்களிலிருந்து கனரக வாகனங்கள் டெல்லி வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு சிக்கித் தவித்து வரும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பல சாலைகளில் நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே நீரில் சிக்கியது. போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல மாநிலங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உத்தரகண்டில் மிக மிக கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்றும் நாளையும் மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், அசாம், உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.