மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ரஃபேல் விவகாரம்:


ரஃபேல் விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில், இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், மற்றொரு திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2015-16 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் ஒத்துழைப்பு தரும்படி பிரான்ஸ் நீதிபதி இந்திய அரசை கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக பல்வேறு புலனாய்வு தகவல்களை வெளிகொண்டு வந்துள்ள மீடியாபார்ட் செய்தி இணையதளம், இதை செய்தியாக வெளியிட்டுள்ளது. "2016 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக டசால்ட் நிறுவனம் பல மில்லியன் யூரோக்களை இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு ரகசியமாக வழங்கியதற்கான விரிவான ஆதாரங்களை மீடியாபார்ட் முன்பு வெளி கொண்டு வந்தது. 


இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த பிரான்ஸ் நாட்டின் நீதிபதி:


தற்போது, இது தொடர்பான வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்வதில் நீதிபதிகள் குறிப்பாக ஆர்வமாக உள்ளனர்" என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் பதில் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. 


வழக்கமாக, இம்மாதிரியான விவகாரங்களில், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் வழியேதான் தகவல்கள் தெரிவிக்கப்படும். அவர்கள் மூலமாகத்தான், கோரிக்கைகள் விடுக்கப்படும். அதை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையாளும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை(DOPT), நிதியமைச்சகம் ஆகியவை கையாளும். 


36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்திய அரசு ரூ.59,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம், டசால்ட் ஏவியேஷன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 


இம்மானுவேல் மேக்ரானுக்கு அனில் அம்பானி எழுதிய ரகசிய கடிதம்:


ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக டசால்ட் நிறுவனம் பல கோடி யூரோ பணத்தை இந்திய இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு அளித்தது என்பது பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது.


விவிஐபிக்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஏழுந்த புகாரில், அமலாக்கத்துறை ஏற்கனவே இடைத்தரகர் சுஷேன் குப்தாவை விசாரணை செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக, குப்தாவுக்கும் டசால்ட் நிறுவனத்திற்கும் உள்ள ஆழமான தொடர்பு குறித்து மீடியாபார்ட் கடந்த 2021ஆம் ஆண்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவலையும் கட்டுரையாக மீடியாபார்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டபோது, பிரான்ஸ் அரசால் அனில் அம்பானிக்கு வரி குறைப்பு தரப்பட்டுள்ளது. இதற்காக, பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் (இப்போது அதிபர்) இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நிதி அமைச்சர் மைக்கேல் சபின் ஆகியோருக்கு அனில் அம்பானி கடிதம் எழுதினார்.


151 மில்லியன் யூரோ வரிக் கட்டணத்தைக் குறைக்க தனிப்பட்ட அளவில் தலையிடுமாறு அவர்களிடம் அனில் அம்பானி கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியில், அனில் அம்பானியிடம் 6.6 மில்லியன் யூரோக்களை கேட்கப்பட்டது.