உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக இருந்த நிலையில், அவரது செயல்பாடுகளில் எம்எல்ஏகள் சிலர் அதிருப்தியில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து,  பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திரிவேந்திர சிங் ராவத்தை நேரில் அழைத்துப் பேசியதை தொடர்ந்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 


இதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட்டின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக  ஏபிபி செய்திக்கு தகவல் வெளியாகியுள்ளது.


தகவல்களின்படி, ராவத் தனது ராஜினாமாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பியுள்ளார். ராவத், பாஜக தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 191 ஐக் குறிப்பிட்டு, அடுத்த 6 மாதத்தில் உத்தரகாண்ட் சட்டமன்றத்தை வழிநடத்த மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அரசியலமைப்பின் படி, மார்ச் 10 ம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற ராவத், பதவியில் தொடர செப்டம்பர் 10ஆம் தேதிக்கு முன் மாநில சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். வரும் இரண்டு மாதங்களில் அவர் எம்.எல்.ஏ. ஆக முடியாது என்றும், அவர் ஏன் ராஜினாமா செய்ய முயன்றார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.