மேற்கு வங்கம்,தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியானது. அதில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இந்த முடிவுகளுக்கு பிறகு அங்கு சில வன்முறைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. 


குறிப்பாக பாஜக கட்சி தரப்பில் மேற்கு வங்கத்தில் வன்முறை செயல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேபோல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பு வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. 




அந்த வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற அமர்வு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் புலனாய்வு அமைப்பு தலைவர் ராஜீவ் ஜெயின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 


இந்தக் குழு கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தியது. அதன்பின்னர் நேற்று இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதில், தேர்தல் முடிவிற்கு பிறகு வன்முறை நடந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக தெரிகிறது. 




எனினும் மேற்கு வங்க அரசு தரப்பில், “அப்படி ஒரு வன்முறை செயல்கள் நடக்கவே இல்லை. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்த போது ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. ஆகவே இந்த வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு மேற்கு வங்க அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வன்முறையில் உயிரிழந்தாக கூறப்படும் நபருக்கு இரண்டாவது முறையாக ராணுவ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் அப்படி ஒரு வன்முறை நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. மேலும் இது அரசியல் நோக்கங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள புகார் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க: உயரங்களை அடைய உயரம் தடையில்லை : ஆர்த்தி தோக்ரா ஐ.ஏ.எஸ் கதை..!