டெல்லி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர், அது பொய்யான தகவல் என்பது கண்டறியப்பட்டது.
டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:
இதையடுத்து, பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறி உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவனை காவல்துறை காவலில் எடுத்துள்ளது. விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அந்த சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்) உஷா ரங்னானி கூறுகையில், "சில நாள்களுக்கு முன்பு, மற்றொரு சிறுவன் பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தியை அறிந்து அந்த சிறுவன் விளையாட்டாக வெடுகுண்டு மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது. கடந்த ஜூன் 18ஆம் தேதி துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.
விளையாட்டே வினையானதால் சர்ச்சை:
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. விமானநிலையம் உஷார்படுத்தப்பட்டு, அவசரநிலை அறிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணையில் மெயில் வந்த தகவல் பொய்யான என்பது தெரியவந்தது.
விசாரணையில், மின்னஞ்சல் அனுப்பிய உடனேயே இ-மெயில் ஐடி அழிக்கப்பட்டது தெரியவந்தது. உத்ராஞ்சலில் உள்ள பித்தோராகரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழு அனுப்பப்பட்டு, பொய்யான மின்னஞ்சல் அனுப்பியதற்காக சிறுவன் கைது செய்யப்பட்டான்.
தனது பெற்றோர் படிப்பதற்காக மொபைல் வாங்கி கொடுத்ததாகவும், அதன் மூலம் மின்னஞ்சலை அனுப்பியதாகவும் அந்த சிறுவன் போலீஸ் குழுவிடம் தெரிவித்தான். பின்னர், தனது மெயில் ஐடி-யை டெலிட் செய்துவிட்டதாகவும் கூறினார். பயந்துபோன அந்த சிறுவன் பெற்றோரிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. பிடிபட்ட அந்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்" என்றார்.
வழக்குப்பதிவு:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.