இஸ்லாமியர்கள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் தொடங்கி பா.ஜ.க.வினர் பலரும் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.


தொடர் சர்ச்சையில் சிக்கும் பாஜக தலைவர்கள்: மத உணர்வுகளை தூண்டும் விதமாக ஏற்கனவே, பலமுறை கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவரும் அசாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, மீண்டும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக பேசியுள்ளார்.


மக்களவைத் தேர்தல்:


மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசுகள் தங்களுக்குச் செய்த வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொள்ளாமல், வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சிறுபான்மை சமூகத்தினர் இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிகளவில் வாக்களித்தனர் என ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.


அசாமில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அம்மாநிலத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய அசாம் முதலமைச்சர், "இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 47 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 சதவீத வாக்குகளைப் பெற்றன.


அசாம் முதலமைச்சர் சொன்னது என்ன?


காங்கிரஸ் பெற்ற 39 சதவீத வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தால், மாநிலம் முழுவதும் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்த வாக்குகள், ஐம்பது சதவீதம் சிறுபான்மையினர் அதிகம் உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் இருந்து மட்டுமே வந்துள்ளது. சிறுபான்மையினர் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளில் பாஜக 3 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.


இந்துக்கள் வகுப்புவாதத்தில் ஈடுபடுவதில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அசாமில் யாரேனும் வகுப்புவாதத்தில் ஈடுபட்டால், அது ஒரே சமூகம், ஒரே மதம். வேறு எந்த மதமும் செய்வதில்லை.


சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை. ஆனால், மீண்டும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, அசாமிய மக்கள் மற்றும் பழங்குடியினருக்காக பாஜக உழைத்தாலும், பாஜகவுக்கு இந்த சமூகங்கள் 100 சதவீதம் வாக்களிக்கவில்லை" என்றார்.