உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு, ஆழமான பள்ளம் ஒன்றில் பேருந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


உத்தரகாண்டில் பயங்கர விபத்து:


விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை, 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என மாநில மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். நைனிடாலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பேருந்து, கலதுங்கி சாலையில் காட்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்தில் சிக்கிய பேருந்தில் 35 பேர் பயணித்துள்ளனர். நைனிடால் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.என். மீனா, இதுகுறித்து கூறுகையில், "இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சில உடல்களை மீட்டுள்ளோம்" என்றார்.


முன்னதாக, நைனிடாலில் இருந்து கலதுங்கிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக நைனிடால் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை, நைனிடால் காவல்துறையினருக்கு இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.


மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை, நைனிடால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஹல்த்வானியில் உள்ள சுசீலா திவாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


சமீபத்தில், பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.


அதிகரிக்கும் சாலை விபத்துகள்:


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.


இதையும் படிக்க: Israel Palestine History: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் பின்னணி என்ன? - ஓர் பார்வை