உத்தரகாண்ட் மாநிலம் முசோரி-டேராடூன் சாலையில் பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், பேருந்து ஓட்டுநர் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். 


கட்டுப்பாட்டை இழந்த பேருந்து:


இதுகுறித்து முசோரி காவல்துறை தரப்பு பேசுகையில், "இந்தோ-திபெத் எல்லைக் காவல் துறையின் (ITBP) உதவியுடன் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று பயணிகளின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது"


சஈலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் பள்ளத்தில் சிக்கியது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வீரர்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை சென்றுள்ளன. 


உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக மலைபகுதிகள் இருப்பதால் அங்கு விபத்து நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பனிச்சரிவின் காரணமாக அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்து வருகிறது.


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாலை விதிகளை மதிக்காமல் வாகனகத்தை இயக்குதல், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்டவை காரணமாக அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.


தொடர்ந்து அதிகரிக்கும் விபத்துகள்:



இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021ஆம் தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர்.


இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.


2021ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,28,825, மாநில நெடுஞ்சாலைகளில் 96,382, மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 56,007, மாநில நெடுஞ்சாலைகளில் 37,963, மற்ற சாலைகளில் 60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 1,17,765, மாநில நெடுஞ்சாலைகளில் 92,583, மற்ற சாலைகளில் 1,74,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க: IPL2023 SRH vs RR LIVE Score: அதிரடியாக அரைசதம் கடந்த பட்லர் அவுட்; பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 85 -1..!