உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண், தன்னுடைய செல்லப்பிராணி இறந்த துயரம் தாங்காமல் இரண்டு நாள்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பூனையை இரண்டு நாள்களுக்கு தன் அருகே வைத்து அந்த பெண் அழுதுள்ளார். இறுதியில், துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார்.


உயிருக்கு உயிராக இருந்த செல்லப்பிராணி:


உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவின் ஹசன்பூரை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு 32 வயது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியைச் சேர்ந்த ஒருவரை பூஜா திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அன்றிலிருந்து அவர் தனது தாய் கஜ்ரா தேவியுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.


தனிமையால் வாடிய பூஜா, அதை சமாளிக்கும் நோக்கில் செல்லப்பிராணியாக பூனையை தத்தெடுத்துள்ளார். இந்த பூனைதான், அவருக்கு எல்லாமுமாக இருந்தது. இந்த சூழலில், அந்த பூனை கடந்த வியாழக்கிழமை இறந்துவிட்டது.


பூனையை புதைக்க மறுத்த பெண்:


பூனையை புதைத்து விடலாம் என அவரது தாய் சொன்னபோதிலும், ​​பூஜா அதை மறுத்துள்ளார். பூனை மீண்டும் உயிர் பெறும் என கூறியுள்ளார். இறந்த பிறகும், இரண்டு நாட்களுக்கு பூனையின் உடலை அருகில் வைத்து கொண்டு வருந்தியுள்ளார். அதை விட்டுவிட விரும்பவில்லை. அவருடைய தாயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் பூனையை புதைக்க வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர் பிடிவாதமாக இருந்துள்ளார்.


நேற்று மதியம், வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தனது அறைக்கு பூஜா சென்று பூட்டி கொண்டார். இரவு 8 மணியளவில், தனது மகளைப் பார்க்க கஜ்ரா தேவி சென்றுள்ளார். பூஜாவின் உடல் மின்விசிறியில் தொங்குவதையும், அருகில் இறந்த பூனை கிடப்பதையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அலறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து, போலீசார் வீட்டிற்கு வந்தனர். தடயவியல் குழு ஆதாரங்களை சேகரித்தது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.



(மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.





  • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 24640050 (24 மணிநேர சேவை))