இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வரும் அதே வேளையில், கடந்த ஏழு ஆண்டுகளாக நிரந்தர பணிகளில் தரப்படும் ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்ப உயரவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மணி தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


"ஊதியம் உயரவில்லை"


இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களில் சிலரும் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.


இந்த நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக நிரந்தர பணிகளில் வழங்கப்படும் சம்பளம் உயரவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மணி தெரிவித்துள்ளார். 


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "உலக மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு, கற்பித்தல் மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவது முக்கியம்.


வெளியான அதிர்ச்சி தகவல்:


கடந்த ஏழு ஆண்டுகளில் தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் பொருள் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதிலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. ஆனால், வேலைகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. எனவே, வேலைகள் அதிகரிக்கவில்லை என்று சொல்வது தவறு.


2017-18 ஆம் ஆண்டில் 34.7 சதவீதமாக இருந்த தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் கணக்கெடுப்பின்படி ஊதியத் தரவுகளைப் பார்த்தால், ஏழு ஆண்டுகளில் சாதாரண தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் நிலை மேம்பட்டுள்ளது. புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.


ஆனால், நிரந்தர வேலைகளில் ஒரு பெரிய பிரச்னை உள்ளது. இந்த வகையில், ஏழு ஆண்டுகளில் பணவீக்கத்திற்கு ஏற்ப அவர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை. என்னுடைய மதிப்பீட்டைப் பொறுத்தவரை, பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியம் அதிகரிக்காததற்கு முக்கிய காரணம் ஊழியரிடம் திறன் இல்லாததுதான். நாம் திறமையான ஆட்களை பணியமர்த்துவதில்லை. பல நாடுகளின் தரவுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில், நாம் இதில் (திறனில்) பணியாற்ற வேண்டும் என்று நான் கூறுவேன்" என்றார்.