உத்தரப் பிரதேசத்தில் வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக சக ஊழியர்கள் உருவ கேலி செய்த காரணத்தால் அந்த இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்: நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் கிளையில் மக்கள் தொடர்பு பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஷிவானி தியாகி. கடந்த வெள்ளிக்கிழமை, காசியாபாத் உள்ள தனது வீட்டில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


தற்கொலை சம்பவத்தை விவரித்த காசியாபாத் துணை காவல் ஆணையர் ஞானஞ்சய் சிங், "பணியிடத்தில் உருவ கேலி செய்து, அவமானப்படுத்தி, அவரை துன்புறுத்தியதாக தெரிகிறது. அவரது அறையில் இருந்து தற்கொலைக் கடிதம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் அவமானப்படுத்தப்பட்டதை விவரித்திருக்கிறார்.


தற்கொலை கடிதத்தில் ஐந்து பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலில் ஷிவானி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி குடும்பத்தினரிடம் கூறவில்லை.


வங்கி மேலாளரை உருவ கேலி செய்த சக ஊழியர்கள்: ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல், பணியிடத்தில் நடக்கும் கொடுமைகளை பற்றி குடும்பத்தாரிடம் கூறி இருக்கிறார்" என்றார். தனது சகோதரிக்கு நடந்ததை விவரித்த கௌரவ் தியாகி, "அவரது டிரஸ்ஸிங் சென்ஸ், அவரது உணவுப் பழக்கம், அவர் பேசும் விதம் ஆகியவற்றை பற்றி கிண்டல் அடித்துள்ளனர். ஷிவானியை அவமானப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து எரிச்சலூட்டி வந்துள்ளனர்.


என்னுடைய சகோதரியை ஒரு பெண் தாக்கினார். அதற்கு, அவரது முதுகில் ஷிவானி அறைந்தார். அவர் (ஷிவானி) பலமுறை ராஜினாமா செய்ய முயன்றார். ஆனால், ஒவ்வொரு முறையும் நிறுவனம் அதை நிராகரிக்க ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தது.


பெண்ணை அறைந்த சம்பவத்திற்குப் பிறகு, ஷிவானியை அவரது நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது அவரை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. ஷிவானி பலமுறை புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.