சிறையில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


அவமரியாதையை எதிர்கொள்ளும் தன்பாலின ஈர்ப்பாளர்கள்: இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், சிறைத்துறை டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், "பாலின அடையாளம் மற்றும் பாலியல் விருப்பங்கள் காரணமாக பல நேரங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ+) பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் வன்முறை மற்றும் அவமரியாதையை எதிர்கொள்கின்றனர்.


பொருட்கள் மற்றும் சேவைகள் சென்றடைவதில் அவர்களுக்கு பாகுபாடு காட்டவில்லை என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன், பொது மக்களுக்கு பெருமளவில் கிடைக்கும், குறிப்பாக சிறைச்சாலைகளில் அவர்களை வந்து பார்க்கும் பார்வையாளர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி, பின்வரும் வழிகாட்டுதல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.


தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பாக மாதிரி சிறை விதிகள், 2016 மற்றும் 'மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் திருத்தச் சேவைகள் சட்டம், 2023ஐ தயாரித்து அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளிடம் வழங்கியுள்ளோம்.


மாதிரி சிறை விதிகள், 2016:


ஒவ்வொரு கைதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களைப் பார்க்கவோ அல்லது தொடர்புகொள்வதற்கோ மேல்முறையீடு செய்வதற்கு அல்லது ஜாமீன் வாங்குவதற்கு அல்லது அவரது சொத்து மற்றும் குடும்ப விவகாரங்களை நிர்வகிப்பதற்கு நியாயமான வசதிகள் அனுமதிக்கப்படும்.


பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களை பார்க்க அனுமதிக்கலாம். ஒவ்வொரு கைதியும் தங்களை பார்க்க வரும் நபர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.


குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பார்க்க வர வேண்டும். சந்திப்பின்போது, தனிப்பட்ட மற்றும் சொந்த விஷயங்களை மட்டுமே உரையாட வேண்டும். சிறை நிர்வாகம் பற்றியோ, சிறையின் ஒழுக்க நெறிமுறைகள் பற்றியோ, பிற கைதிகள் பற்றியோ அரசியல் பற்றிய பேசக்கூடாது. கைதியை ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே பார்க்க வர வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.