உத்தரபிரதேசத்தில் குளிர் காற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கான்பூரில் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக வியாழக்கிழமை 25 பேர் உயிரிழந்தனர்.


டெல்லி உள்பட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் உறைய வைக்கும் பனியால் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக குளிர் அலை வீச தொடங்கி இருப்பதால் அங்கு தட்பவெப்ப நிலை குறிப்பிட தகுந்த அளவில் குறைந்துள்ளது. 


குறிப்பாக, டெல்லியில் தட்பவெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கடும் குளிர் வீசியது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. டெல்லி, பஞ்சாப், சண்டிகர் மற்றும் ஹரியானாவின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.


இந்த சூழலில் கான்பூரில் கடும் குளிர் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பதினேழு பேர் மருத்துவ உதவி வழங்குவதற்கு முன்பே இறந்துவிட்டனர். ஜலதோஷத்தில் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்தம் உறைவதால் மாரடைப்பு, மூளை பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இருதய சிகிச்சை நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையின்படி, வியாழக்கிழமை 723 இதய நோயாளிகள் அவசர மற்றும் OPD க்கு வந்துள்ளனர். இதில், ஆபத்தான நிலையில் இருந்த 41 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 இதய நோயாளிகள் குளிர் காரணமாக உயிரிழந்தனர். இது தவிர, 15 நோயாளிகள் இறந்த நிலையில் அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர்.


இந்த காலநிலையில் நோயாளிகளை குளிரில் இருந்து பாதுகாக்க வேண்டும் என இருதயவியல் துறை இயக்குனர் பேராசிரியர் வினய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் (கேஜிஎம்யு) ஆசிரிய உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "இந்த குளிர் காலநிலையில் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டும் வராது. அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரும், முடிந்தவரை வீட்டிற்குள் இருக்க வேண்டும்" என்றார்.


வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனியால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது இது இரண்டு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் மிகக் குறைவானது. மேலும் பல மலை பிரதேசங்கள் விட குளிர்ந்த வானிலையாகும். தில்லி-என்.சி.ஆர் உட்பட சமவெளிகள் வழியாக பனி மூடிய இமயமலையிலிருந்து உறைபனி காற்று வீசுவதால், பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளேயே ஹீட்டர்கள் இயக்கி கதகதப்பாக இருந்து வருகின்றனர்.