மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிலில் செஸ்னா பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானத்தின் பைலட் உயிரிழந்துள்ளதுடன், பயிற்சி விமானி காயமடைந்தார்.
இந்த சம்பவம் இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விமானம் தனியார் விமான பயிற்சி அகாடமிக்கு சொந்தமானது. இரவில் அடர்ந்த மூடுபனியில் விமானம் தரையிறங்க முயன்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிமூட்டமான நிலையில் தரையிறங்கும் போது விமானம் கோவிலின் குவிமாடம் மற்றும் மின்சார கம்பிகளில் மோதியதாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். விபத்து நடந்த இடம் சோர்ஹாட்டா விமான ஓடுதளத்தில் இருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது என்று சோர்ஹாட்டா காவல் நிலைய பொறுப்பாளர் ஜேபி படேல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் விமல் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 50 வயதான அவர் பாட்னாவில் வசிப்பவர். பயிற்சி விமானியான 23 வயதான சோனு யாதவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனவும் அவர் ஜெய்ப்பூரில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனு அரசு நடத்தும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மும்பையில் இருந்து விமான நிபுணர்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர் என்று அமைச்சர் மிஸ்ரா போபாலில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த விமானம் ஃபால்கன் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமானது என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் கே.பி.வெங்கடேஷ்வர் ராவ் தெரிவித்தார்.
அடர்ந்த மூடுபனியில் தரையிறங்க முயற்சிக்கும் முன் செஸ்னா பயிற்சி விமானம் பல முறை வட்டங்களில் பறந்தது, என்றார். இந்த விபத்தில் உள்ளூர்வாசிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பயிற்சி விமானி ஆபத்தில் இருந்து மீண்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.