உத்தரப் பிரதேசத்தில் திருடர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது குரைத்து துரத்திய நாய் கவனம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்றிரவு ஒரு பங்களா வீட்டை திருடர்கள் முற்றுகையிட்டனர். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த நாய் ஒன்று மிகவும் சத்தமாக குரைத்து சத்தம் எழுப்பவே திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.
 
நாய்கள் நன்றியுள்ள ஜீவன் என்பதை இந்த நாய் தனது செயலால் நிரூபித்துள்ளது. சமூக அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக என்பது போன்ற காரணங்களுக்காக நாய் வளர்க்காமல், உண்மையில் செல்லப்பிராணி வளர்ப்பில் பிரியமும், ஆர்வமும் இருப்பவர்கள் மட்டுமே நாய் வளர்ப்பது நன்று.


வீட்டுச் சூழலுக்கு ஏற்ப நாய் வாங்க வேண்டும். பெரிய வீடு அல்லது தனி வீடுகளில் பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மென் ஷப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களை வளர்க்கலாம். இவை அதிகமான உணவை உட்கொள்ளக் கூடியவை. அதனால் செரிமானத்துக்கு அவற்றுக்கு ஓடுவது, நடப்பது, விளையாடுவது என்று பயிற்சிகளும் அதிகம் தேவைப்படும் என்பதால், பெரிய சுற்றுப்புறம் அவசியம். மேலும் தோல் நோய்கள் வராமல் இருக்க சூரிய ஒளி அவசியம் என்பதால், அவற்றை இரு வேளை வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.






 


நம்மைப் போலவே நாய்களுக்கும் ஊட்டச்சத்து உணவு அவசியம். மினரல்கள், வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை சரிவிகித அளவில் அவற்றுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து ஒரே வகை உணவை கொடுத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தொற்றுநோய்களில் ஆரம்பித்து, தோல் நோய்கள், அனீமியா, அனீமியாவால் உள்ளுருப்புகளின் செயல்பாடுகள் குறைவது என்று நாயின் ஆயுள் பாதியிலேயே முடிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.


நாம் சாப்பிடும் உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கப்பட்டிருந்தால், அதை நாய்க்கு வழங்கக் கூடாது. காரணம், நாய்க்கு வெங்காயம் செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும். பல நாட்களாக இப்படி சேரும்போது, அது விஷமாக மாறிவிடும். இதனால் தோல் பிரச்னை முதல் உள்ளுறுப்புகள் பாதிப்பு வரை ஏற்படலாம்.


செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், அவற்றை கவனமாகப் பராமரிக்க வேண்டும். நமக்கெல்லாம் ரேபீஸ் மட்டுமே நாய் கடித்தால் வரும் என்று தெரிந்துவைத்துள்ளோம். ரேபீஸ் தவிர 'எக்கினோகாக்கஸ்' என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் 'ஹைடாட்டிட்' என்ற கொடிய நோயும், நாயினால் பரவுகிறது. இதுபோல் நாயின் ரோமங்களால் ஏற்படும் சுவாசக்கோளாறு என நிறைய உள்ளன. நாய்களை நோய் தாக்காமல் பாதுகாத்தால் போதும் நன்றியுள்ள அந்த ஜீவனுடன் நாமும் மகிழ்ச்சியாய் நேரத்தைப் போக்கலாம். நாய்கள் தான் அதிகப்படியாக வளர்க்கப்படும் செல்லப் பிராணியாக இருப்பதாலும், ரேபீஸ் தாக்கமும் நாய்களாலேயே அதிகமாக இருப்பதாலும் அவற்றிற்கான தடுப்பூசி அட்டவணையைப் பட்டியலிடுகிறேம். இதன்படி தடுப்பூசி போட்டுவந்தால் நாயையும், வளர்ப்போரையும் நோய்களில் இருந்து முழுமையாகப் பாதுகாக்கலாம்.


• நாய்க்குட்டி பிறந்த 4-வது வாரம் (28வது நாள்) – DP தடுப்பூசி


• நாய்க்குட்டி பிறந்த 8-வது வாரம் (56வது நாள்) – DHPPi தடுப்பூசி


• நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம் (70 முதல் 90 நாட்களுக்குள்) – DHPPi (Booster Dose)


• 12வது வாரம் (90-வது நாள்) – Anti Rabies Vaccine (ARV) வெறிநோய்த் தடுப்பு நோய்


• ஒவ்வொரு வருடமும் DHPPi மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும்.


இவை எல்லாம் செய்து நாயை பாசமுடன் வளர்த்தால் அது செல்லப் பிராணியாக மட்டுமல்ல ஆபத்பாந்தவனாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.