காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குறித்து பலர் அறிந்திராத, ருசிகரமான தகவல்களை அவரின் மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெண்களை மையப்படுத்தி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட பிரியங்கா காந்தி, தனது தாயார் சோனியா குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பேசிய பிரியங்கா காந்தி, "பாட்டி இந்திரா காந்தி, தாய் சோனியா காந்தி ஆகிய இரண்டு துணிவான வலிமையான பெண்களால் வளர்க்கப்பட்டேன். 33 வயது மகனை இந்திரா காந்தி பறி கொடுத்தார். அப்போது, எனக்கு 8 வயது. 

Continues below advertisement

ஆனால், சஞ்சய் காந்தி இறந்த அடுத்த நாளே, அவர் தேசத்திற்கு சேவை செய்வதற்காக வேலைக்குச் சென்றார். கடமையும் உள்ளிருந்த சக்தியும்தான் அவரை இயங்கவைத்தது. இந்திரா காந்தி இறக்கும் வரை தேசத்திற்கு சேவை செய்தார்" என்றார்.

தாயார் சோனியா காந்தி குறித்து பேசிய அவர், "சோனியா காந்தி தனது 21வது வயதில் ராஜீவ் காந்தியை காதலித்தார். (சோனியா) ராஜீவை திருமணம் செய்து கொள்ள இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். அவர் நம் மரபுகளைக் கற்றுக்கொள்ள போராடினார். அவர் இந்தியாவின் வழிகளைக் கற்றுக்கொண்டார். 

இந்திரஜியிடமிருந்து அவர் அனைத்தையும் உள்வாங்கினார். 44 வயதில், தனது கணவரை இழந்தார். அவர் அரசியலை விரும்பாவிட்டாலும், தேசத்திற்கு சேவை செய்வதற்கான பாதையை அவர் தேர்வு செய்தார். 76 வயதாகும் இன்று வரை தனது வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வருகிறார்.

சோனியா இந்திரா காந்தியிடமிருந்து ஒரு மிக முக்கியமான விஷயத்தை கற்றுக்கொண்டார். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன நடந்தாலும், எவ்வளவு பெரிய சோகத்தை நீங்கள் சந்தித்தாலும், வீட்டிலோ, வேலையிலோ அல்லது வெளியிலோ, கஷ்டங்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், எழுந்து நின்று அதை எதிர்த்து நின்று போராட உங்களுக்கு திறன் இருக்கும்" என்றார்.

காங்கிரஸ் கட்சியில் அதிக காலம் தலைவராக பதவி வகித்த பெருமை சோனியா காந்தியையே சாரும். இத்தாலியில் பிறந்தவர் என்றாலும், பின்னாட்களில் பிரதமர் ஆகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இருந்தபோதிலும், அதை மறுத்து, அந்த பதவியை மன்மோகன் சிங்குக்கு வழங்கினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், தேசிய ஆலோசனை குழு தலைவராக பதவி வகித்தார். மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.