உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் நந்தகோபால் குப்தா நந்தி. ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்கள் மத்தியில் பெயர் எடுப்பதற்கு பல்வேறு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாள்வது வழக்கம். நந்தகோபால் நந்தியின் அணுகுமுறைதான் தற்போது உத்தரபிரதேசம் முழுவதும் பேசுபொருளாக உள்ளது.
நந்தகோபால் நந்தி உத்தரபிரதேசத்தின் உள்ளே எங்கேனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அரசு மாளிகையிலோ, நட்சத்திர விடுதியிலோ தங்குவது கிடையாது. அதற்கு பதிலாக தனது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களின் வீடுகளில் தங்குகிறார். அதுவும் மிப்பெரிய பணக்கார நிர்வாகியின் வீட்டில் தங்காமல் நடுத்தர குடும்பமாக உள்ள தொண்டரின் வீட்டிலே வசிக்கிறார்.
அந்த நாள் அவரது வீட்டிலே இரவு உணவை முடித்து அங்கேயே தங்கும் நந்தகோபால் நந்தி அடுத்த நாள் காலையில் அந்த தொண்டர்களின் வீடுகளிலே குளிக்கிறார்.
அதுவும் கிராமப்புறங்களில் தண்ணீர்தொட்டிகள் முன்பு, குழாய்களின் முன்பு மக்கள் குளிப்பதை போல மிகவும் எளிமையாக குளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் நந்த்கோபால் நந்தி அங்குள்ள தொண்டர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி குளித்து, தலைவாரி கிளம்புகிறார். இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நந்த்கோபால் நந்தியின் அணுகுமுறை உத்தரபிரதேச மக்கள் மத்தியில், அந்த மாநில பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்