உத்தரப் பிரதேசம் மாநிலம் படவுன் நகரில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நடுரோட்டில் காரில் பயணம் செய்த குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள் இருந்ததை கூட பொருட்படுத்தாமல் காரின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்: கார் கண்ணாடியை அடித்து நொறுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் இருப்பதாக காரில் இருந்தவர்கள் கதறிய அழுதனர். இருந்தபோதிலும் அந்த நபர் விடாது தாக்குதல் நடத்தினார்.


அபிஷேக் ஷர்மா என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அபிஷேக் ஷர்மாவும் அவரது குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென, தாக்குதல் நடத்தி கார் கண்ணாடியை சிலர் உடைத்துள்ளனர். 


இந்த சம்பவம் கடந்த 19ஆம் தேதி நடந்துள்ளது. இதுகுறித்து அபிஷேக் ஷர்மா கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் காரை முந்திச் சென்று, அவர்களின் வாகனத்தை எங்களுக்கு முன்னால் நிறுத்தினார்கள்.


வைரலாகும் வீடியோ: நான் அதை வீடியோ எடுத்தேன். நாங்கள் காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால், எஃப்ஐஆரில் தொடர்புடைய பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரு கும்பலும் எங்களைத் தாக்கி எங்கள் காரை சேதப்படுத்தினர்.


அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவிய பின்னரே காவல்துறை நடவடிக்கை எடுத்தது. எங்களைத் தாக்கியவர் அரசு மருத்துவர் என்றும் அவர் பெயர் வைபவ் என்றும் நம்பப்படுகிறது" என்றார்.


 






இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் காரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு கும்பலை அழைத்து வாகனத்தை சேதப்படுத்தினர். காரில் இருந்தவர்களும் தாக்கப்பட்டனர். சம்பவத்தை அடுத்து சிலர் கைது செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என தெரிவித்தது.