மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.


பெண் மருத்துவருக்கு நேர்ந்த மனிதத்தன்மையற்ற செயலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.


குற்றவாளி குறித்து அதிர்ச்சி தகவல்கள்:

சிபிஐ காவலில் உள்ள குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெளியாகியுள்ள முடிவுகள் பதைபதைக்க வைக்கின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய், அடிக்கடி ஆபாச படங்கள் பார்த்து வந்துள்ளார். சொல்லப்போனால் அதற்கு அடிமையாக இருந்துள்ளார்.


தான் செய்த குற்றத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை, மிருகத்தை போன்ற குணம் படைத்தவராக தெரிகிறது என சஞ்சய் ராய் குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "செய்த குற்றத்தை நினைத்து சிறிதளவு கூட துக்கப்படவில்லை. சம்பவத்தன்று ஒவ்வொரு நிமிடமும் என்ன நடந்தது என்பது பற்றி எந்த வித இடர்ப்பாடும் இன்று விவரித்தார்.  அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தோன்றியது" என்றார்.


அண்டை வீட்டார் கூறுவது என்ன? விசாரணையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் சிபிஐயிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, ராயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் ஆபாச படங்கள் இருந்ததை உள்ளூர் போலீசார் கண்டுபிடித்தனர். 


சஞ்சய் ராயுக்கு பல முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக மனைவிகள் விட்டு சென்றதகாகவும் கூறப்படுகிறது. கடந்தாண்டு, அவரது மனைவி புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் மது குடித்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவது அவரது வழக்கமாக இருந்ததாகவும் சஞ்சய் ராயின் அண்டை வீட்டார் குற்றம்சாட்டுகின்றனர்.


ஆனால், இவற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சஞ்சய் ராயின் மனைவி மாலதி ராய், "என் மகன் அப்பாவி. போலிஸாரின் அழுத்தத்தால் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார்.