பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதா என கேள்வி எழும் வகையில் இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மனதை உலுக்கி வருகிறது.


பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறுகிறதா இந்தியா? இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 10 நாள்களில், கொல்கத்தா மருத்துவர் சம்பவம் தொடங்கி மகாராஷ்டிரா மழலையர் பள்ளி சம்பவம் வரை, நம்மை பதைபதைக்க வைத்தது.


அதன் தொடர்ச்சியாக, அஸ்ஸாமில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாகோன் மாவட்டத்தில் டியூசனுக்கு சென்றுவிட்டு திரும்பிய 14 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சம்பவம், நேற்று மாலை நடந்தது.


சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிகிச்சைக்காக மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் உள்ள திங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அஸ்ஸாமில் சிறுமிக்கு நடந்த கொடூரம்: இச்சம்பவத்தையடுத்து மாணவர் சங்கம் இன்று அப்பகுதியில் பந்த் நடத்தியது. இதன் காரணமாக அங்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விசாரணைக்காக 2 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


இந்த சம்பவத்திற்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிட்ட அவர், "திங்கில் சிறுமிக்கு நடந்த கொடூரமான சம்பவம்,  மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்.


 






எங்கள் கூட்டு மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது. நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம். குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது விரைவான தீர்க்கமான நடவடிக்கை எடுக்க உறுதி செய்ய வேண்டும் என அஸ்ஸாமின் காவல்துறை இயக்குநருக்கு (டிஜிபி) உத்தரவிட்டுள்ளேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.