உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பாலியா மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜானகி தேவி. இவரது கணவர் மோதிசந்த் சர்மா. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மோதிசந்த் சர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரை வீட்டில் வைத்து அவர்கள் பராமரித்து வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு மோதிசந்த் சர்மா காணாமல் போனார்.
இதையடுத்து, காணாமல் போன மோதிசந்த் சர்மாவை அவரது குடும்பத்தினர் தீவிரமாக தேடினர். ஆனாலும், அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாலியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஜானகி தேவி சென்றுள்ளார்.
அப்போது, அந்த மருத்துவமனையின் வெளியே அழுக்குத் துணியுடன், நீண்ட தாடியுடன் உடலில் சில காயங்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருந்தார். சுற்றிலும் குப்பை பைகளுடன், கிழிந்த துணியுடன் மரத்தின் கீழ் அமர்ந்திருந்த அந்த ஆண் பார்ப்பதற்கு தன் கணவர் மோதிசந்த் சர்மா போல இருப்பதாக உணர்ந்தார். சட்டென்று அவர் அருகே சென்று பார்த்தபோது, அது தன் கணவர் மோதிசந்த் சர்மாதான் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தன் கணவரின் நிலை கண்டு மனமுடைந்த ஜானகிதேவி சாலையிலே அவர் அருகில் அமர்ந்து அழத்தொடங்கினார். பின்னர், தனது மகன்களுக்கு போன் செய்து தனது மகன்களையும் வரவழைத்துள்ளார். அவர்களிடம் இவர்தான் உங்கள் அப்பா என்றும், அவரது நிலையை கண்டும் கண்ணீர் வடித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவர் சாலையில் மிகவும் மோசமான நிலையில் அமர்ந்திருந்ததை கண்டு, அவரது அருகிலே அமர்ந்து அவரை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்து ஜானகி தேவி கண்ணீர் விட்ட சம்பவம் பார்ப்பவர்களையே கண்கலங்க வைத்தது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காணாமல் போன கணவனை 10 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி யதார்த்தமாக சினிமா பாணியில் கண்டுபிடித்ததும், அவரை கண்டு அவர் கண்கலங்கியதும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மேலும் படிக்க: Opposition Alliance INDIA: இந்தியா கூட்டணியில் குழப்பம்? சரத் பவாரின் டபுள் கேம்? தள்ளிப்போகிறது எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம்..!
மேலும் படிக்க: PSLV C56: வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 56, வானிலை ஆராய்ச்சிக்கான 7 செயற்கைகோள்கள்..!