உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ளது பிலிபிட் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பூரன்புர் – பக்வந்த்பூர் கிராமங்களை இணைக்கும் விதமாக சமீபத்தில் சாலை ஒன்று அமைக்கப்பட்டது.
புத்தம் புதிய தார்ச்சாலையாக அமைக்கப்பட்ட இந்த சாலை பிரதம மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. மேற்கூறிய இந்த இரண்டு கிராமங்களை இணைக்கும் விதமாக சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட இந்த சாலையின் மதிப்பு ரூபாய் 3.8 கோடி ஆகும். ஆனால், புதியதாக அமைக்கப்பட்ட இந்த தார்ச்சாலை எந்தவொரு தரமுமின்றி இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதியதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை தரமற்றது என்பதை நிரூபிக்கும் விதமாக, அந்த தார்ச்சாலைகளை வெறும் கைகளாலே பெயர்த்து எறிகிறார். அவர் அந்த சாலையை தனது கைகளால் பிய்க்க, புதிய தார்ச்சாலை மிகவும் எளிதாக அவரது கைகளில் வருகிறது. இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுக்கிறார்.
தரமற்ற தார்ச்சாலை :
அப்போது, தார்ச்சாலையின் தரத்தை மேற்கோள் காட்டி அந்த இளைஞர் கேள்வி கேட்கிறார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்தவொரு சாலையும் புதியதாக அமைக்கப்படும்போது ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, நன்றாக தோண்டிவிட்டு, அதன் மீது ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவை பயன்படுத்தி பின்னரே தார் கொண்டு புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், வெறும் கைகளாலே பெயர்த்து எடுக்கப்படும் அளவிற்கு ரூபாய் 3.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற தார்ச்சாலை அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : Delhi Murder: காதலி கொடூர கொலை... சதித் திட்டம் தீட்ட உதவியதா அமெரிக்க சீரிஸ்? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
மேலும் படிக்க : Punjab : ஆயுத கலாச்சாரத்தை போற்றும் பாடல்களுக்குத் தடை - பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு