டெல்லியில் வசித்து வரும் அப்தாப் அமீன் பூனவல்லா எனும் நபர் தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த ஷ்ரத்தாவைக் கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக கூறுபோட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஸ்டோர் செய்து, காடுகளில் வீசி எறிந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


35 துண்டுகளாக உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் சேமிப்பு


மும்பையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கால் சென்டரில் பணிபுரிந்து வந்த ஷ்ரத்தா அப்தாப்பை சந்தித்து, டேட் செய்யத் தொடங்கினார். இவர்களது உறவுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அங்கிருந்து இருவரும் டெல்லி சென்று, மெஹ்ராலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசிக்கத் தொடங்கினர்.


தொடர்ந்து அப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தத் தொடங்கியதை அடுத்து, இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியுள்ளது.


இந்நிலையில், கடந்த மே 18ஆம் தேதி ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, 300 லிட்டர் குளிர்சாதன பெட்டி ஒன்றை வாங்கி அவரது உடல் பாகங்களை பதப்படுத்தி வந்துள்ளார்.


காட்டில் வீசி எறியப்பட்ட உடல் துண்டுகள்


அதன் பின்னர் 18 நாள்கள் தினம் நள்ளிரவு 2 மணியளவில் மெஹ்ராலி காட்டில் தனது காதலி ஷ்ரத்தாவின் உடல் துண்டுகளை வீசியெறிந்து வந்துள்ளார்.






இதனிடையே ஷ்ரத்தாவின் மொபைல் ஃபோன் 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததாக ஷ்ரத்தாவின் தோழி அவரது சகோதரருக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், ஷ்ரத்தாவின் குடும்பத்தினரும் அவரது சமூக ஊடகக் கணக்கை சரிபார்த்துள்ளனர். அதில் எந்தவித அப்டேட்டும் இல்லாத நிலையில் சென்ற மாதம் ஷ்ரத்தாவின் தந்தை விகாஷ் மதன் வாக்கர் அவரை நேரில் சந்திக்க டெல்லி வந்துள்ளார். 


நவம்பர் 8 ஆம் தேதி, விகாஸ் மதன் வாக்கர் டெல்லி சென்ற நிலையில், ​​​அவரது பிளாட் பூட்டி இருந்ததால், மெஹ்ராலி காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார்.


குடும்பத்தினர், நண்பர்கள் சந்தேகம்


அப்தாப் தன்னை அடிக்கடி அடிப்பதாக ஷ்ரத்தா ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் தனது புகாரில்  விகாஸ் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கிய மெஹ்ராலி காவல் துறையினர், ஷ்ரத்தாவை கொலை செய்தது அவரது காதலன் அப்தாப் தான் எனக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்.


தன் காதலியைக் கொலை செய்த அப்தாப் அமீன் பூனவல்லா மீது கொலை வழக்கு பதிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெஹ்ராலி காடுகளில் இருந்து  சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


’டெக்ஸ்டர் சீரிஸ் பார்த்து ஈர்க்கப்பட்டார்’


இந்நிலையில், விசாரணையில் பிரபல சைக்கோ கொலையாளி பற்றிய அமெரிக்க க்ரைம் த்ரில்லர் தொடரான ‘டெக்ஸ்டர்’ பார்த்து அப்தாப் ஈர்க்கப்பட்டதும்,  தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் துர்நாற்றம் வராமல் சமாளிக்க ஊதுபத்தி கொளுத்தி  சமாளித்ததும்  தெரிய வந்துள்ளது. 


டெக்ஸ்டர் சீரிஸில் கதாநாயகன் தடயவியல் நிபுணராகவும் சீரியல் கொலையாளியாகவும் இருவேறு வாழ்க்கை வாழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்தாப் சமையல்காரராகப் பயிற்சி பெற்றதால் இறைச்சிக் கத்தியைப் பயன்படுத்துவதில் தேர்ந்து விளங்கியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.