வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது மிசோரம். அந்த மாநிலத்தில் உள்ள நாதியால் மாவட்டத்தில் மவுடார்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
கல்குவாரி :
இந்த கல்குவாரியில் பிற மாநில தொழிலாளர்கள் உள்பட பலரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சாப்பிட்டு விட்டு வந்த பணியாளர்கள் கல்குவாரிக்கு பணிக்கு திரும்பியுள்ளனர்.
கல்குவாரிக்கு உள்ளே பணியாளர்கள் மும்முரமாக பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென்று கல்குவாரியின் மேலே இருந்த கற்கள் மற்றும் மண் சரிந்ததில் திடீரென்று கல்குவாரிக்குள்ளே 15 தொழிலாளர்கள் புதைந்து சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களுடன் கனரக வாகனங்கள் 5 மற்றும் ட்ரில்லிங் இயந்திரங்களும் உள்ளே சிக்கியுள்ளன.
15 தொழிலாளர்களின் கதி என்ன..?
உள்ளே சிக்கியுள்ள 15 தொழிலாளர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இவர்கள் அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வௌியில் இருந்து இந்த விபரீதத்தை கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக அருகில் இருந்த லெய்டி கிராமம் மற்றும் நாதியால் நகரத்தினருக்கு தகவல் அளித்தனர். அவர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கல்குவாரி கடந்த இரண்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது.