உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


பிரதமர், முதலமைச்சரை புகழ்ந்ததற்காக விவாகரத்து செய்த கணவர்: விவாகரத்து செய்த அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனது மாமியார், கணவர் உள்ளிட்டவர்களால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் புகார் தெரிவித்துள்ளார். தன்னுடைய கழுத்தை நெரிக்க கணவரின் குடும்பத்தினர் முயன்றதாகவும் அவர் கூறினார்.


இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட பெண் பேசுகையில், "நான் பஹ்ரைச்சில் உள்ள மொஹல்லா சாராய், தானா ஜர்வால் சாலையில் வசிக்கிறேன். கடந்த 2023ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி, அயோத்தி கோட்வாலி நகரில் உள்ள மொஹல்லா டெல்லி தர்வாசாவில் வசிக்கும் இஸ்லாமியரான அர்ஷத் என்பவரை நான் திருமணம் செய்துகொண்டேன்.


இரு வீட்டாரின் சம்மதத்தோடும், தன் சக்திக்கு மீறி என் தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்குப் பிறகு, ஒரு நாள் ஊருக்கு வெளியே சென்றபோது, ​​அயோத்தி சாலைகள், அழகுபடுத்திய விதம், வளர்ச்சி, அங்குள்ள சூழல் எனக்குப் பிடித்திருந்தது.


அதிரடி காட்டிய காவல்துறை: இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை என் கணவர் முன்னிலையில் பாராட்டினேன். இதையடுத்து, என்னை எனது பெற்றோர் வீட்டிற்கு கணவர் அனுப்பி வைத்தார். சூடாக இருக்கும் பருப்பை என் மீது கொட்டினார்" என்றார்.


இதுகுறித்து ஜார்வால் சாலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (SHO) பிரிஜ்ராஜ் பிரசாத் கூறுகையில், "சிறிது நேரம் கழித்து, உறவினர்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தனர். பின், அந்த பெண் தனது கணவருடன் வாழ அயோத்தி திரும்பினார்.


அப்போது, முதலமைச்சர், பிரதமர் ஆகியோரை திட்டி, தலாக், தலாக், தலாக் என்று கூறி அந்த பெண்ணை விவாகரத்து செய்தார். விவாகரத்து கொடுத்த அதே நாள், அந்த பெண்ணை அவரது கணவர் அடித்திருக்கிறார்" என்றார்.


பெண் அளித்த புகாரின் பேரில் கணவர் அர்ஷத், மாமியார் ரைஷா, மாமனார் இஸ்லாம், மைத்துனர் குல்சும் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.