உத்தர பிரதேசத்தில் கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோவானது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உத்தர பிரதேசம்:



உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாங்கே பிஹாரி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கிருஷ்ணர் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். இந்த கோயிலில் கிருஷ்ணரை வழிபாடு செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் என கூறப்படுகிறது. 


இந்த நிலையில், அந்த கோயிலின் கருவறையில் ஏசி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த ஏசியின் நீர் வெளியேற்றும் அமைப்பில், வெளியேறும் தண்ணீரை தீர்த்தம் என பக்தர்கள் அருந்தும் காட்சியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஏசி நீர்:


கோயிலின் சுவரில் யானை தலை அமைப்பிலான சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. யானையின் வாயில் இருந்து தண்ணீர் விழுவது போன்று வீடியோ காட்சியில் பார்க்க முடிகிறது. இதனைக் கண்ட பக்தர்கள் சாமியின் பாதத்திலிருந்து வரும் தீர்த்த நீர் என்று நினைத்து ஏசி தண்ணீரை அருந்தினர். மேலும் சில பக்தர்கள் பிளாஸ்டிக் கப்பை கொண்டு வந்து பிடிப்பதையும், சிலர் தலையில் தெளித்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது.






அப்போது அந்த இடத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யூடியூபர் ஒருவர் இதைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் தண்ணீரை குடித்தவர்களிடம் இது தீர்த்தம் இல்லை, ஏசியில் இருந்து வழியும் தண்ணீர் என்று கூறியுள்ளார் அதை கண்டுகொள்ளாத  சில மக்கள் அந்த தண்ணீரை குடித்துக் கொண்டும் தலையில் தெளித்துக் கொண்டும் சென்றனர். 


இதுகுறித்து கோயிலின் பராமரிப்பாளர் ஆஷிஷ் கோஸ்வாமி  என்பவர் கூறுகையில், யானை அமைப்பில் இருந்து நீர் சொட்டுவது தீர்த்தம் என்று சிலர் வதந்திகளை பரப்பியுள்ளனர்.இந்த தவறான எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். கருவறையில் பொருத்தப்பட்டுள்ள ஏசியில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. இது 'தீர்த்தம்' இல்லை" என்றார்.


வைரலாகும் வீடியோ:


தற்போது இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுப்பொருளாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த  ஒருவர் தெரிவித்துள்ளதாவது, மூட நம்பிக்கையில் இருந்து , மக்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 


மற்றொரு சமூக வளைதள பயனர் தெரிவிக்கையில், இந்த மக்கள் பாவம் , அவர்களுக்கு ஏசியில் இருந்து வரும் தண்ணீர் என தெரியவில்லை, தெரிந்தால் ஏன் குடிக்கப் போகிறார்கள்? நிர்வாகம் அதை சரியாக , தீர்த்தல் இல்லை; ஏசி நீர் என மக்களுக்கு அறிந்து கொள்ளும்படி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.