ரொட்டியையும் பெண்களையும் மண்ணையும் வங்கதேச குடியேறிகள் களவாடுவதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசி இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இஸ்லாமியர்கள் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட பிரதமர் தொடங்கி பாஜகவினர் பலரும் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.


சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி:


கடந்த தேர்தல்களை போல ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதை பாஜக வியூகமாக வகுத்திருக்கிறது. ஜார்க்கண்ட மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும் அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, இலங்கைக்கு அனுமன் தீ வைத்தது போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவியவர்களுக்கு தீ வைப்போம் என தெரிவித்திருந்தார்.


அதன் தொடர்ச்சியாக, இன்றைய பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும் சர்ச்சையாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள், இங்கிருக்கும் ரொட்டியையும் பெண்களையும் மண்ணையும் களவாடுவதாக தெரிவித்துள்ளார்.


வெறுப்பு பேச்சா?


கர்வா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர், "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அரசு, வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த அரசு, சமாதான அரசியலை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


இந்த கட்சிகள் மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்தை குலைத்து வருகின்றன. வங்கதேச ஊடுருவல்காரர்களின் வாக்குகளை பெற, ஜார்க்கண்ட் முழுவதும் அவர்களை குடியேற்றி வருகிறது" என்றார்.


தொடர்ந்து பேசிய பிரதமர், "சரஸ்வதி வந்தனா ஸ்லோகத்தை பள்ளிகளில் அனுமதிக்கவில்லை என்றால், ஆபத்து எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். திருவிழாக்களில் கல் வீச்சு நடந்தால், துர்கா மாதாவை தடுத்து நிறுத்தி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் போது, ​​அது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிவீர்கள்.


 






ஊடுருவல் விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று நிர்வாகம் மறுக்கும் போது, ​​அரசு இயந்திரத்திலும் ஊடுருவல் நடந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. ரொட்டியையும் பெண்களையும் மண்ணையும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் களவாடி செல்கின்றனர்" என்றார்.