பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்தபோதிலும், இந்த கொடூர சம்பவங்கள் நின்றபாடில்லை.


குறிப்பாக, பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான செய்திகள் தினந்தோறும் செய்தித்தாள்களில் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், உன்னாவ் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடும் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நடன கலைஞருக்கு நேர்ந்த கொடூரம்:


சொத்து வியாபாரி ஒருவரின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய நடன கலைஞர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நடனக் கலைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "நான் உள்பட மூன்று நடனக் கலைஞர்கள் கொண்ட நடன குழு, சொத்து வியாபாரியின் பிறந்தநாள் விழாவில் நடனமாக புக் செய்யப்பட்டோம். 


நான் எனது நடன நிகழ்ச்சியை முடித்துவிட்டு நிகழ்விலிருந்து வெளியேறும் போது, ​​ஆறு பேர் என்னை ஒரு காரில் கடத்திச் சென்று அருகிலுள்ள காட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். குற்றம் செய்தபோது ஆண்கள் குடிபோதையில் இருந்தனர்" என்றார்.


குற்றவாளிகள் தலைமறைவு:


நடனக் கலைஞரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர் அந்த கும்பல். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க உன்னாவ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


"முதலில் ஜாஜ்மாவ் காவல் நிலையத்திற்கு சென்றேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், உன்னாவ் சதாரில் உள்ள கோட்வாலி போலீசாரை அணுகினேன்" என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அவரது புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


இச்சம்பவம் குறித்து பேசியுள்ள உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் மீனா, "புகார் அளித்த பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்" என்றார்.


குற்றங்கள் அதிகரிப்பு:


கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் சராசரியாக தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.